/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
21 குண்டுகள் முழங்க எம்.எல்.ஏ., உடல் தகனம்
/
21 குண்டுகள் முழங்க எம்.எல்.ஏ., உடல் தகனம்
ADDED : ஏப் 08, 2024 05:17 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மறைந்த புகழேந்தி எம்.எல்.ஏ., உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி, 71; உடல் நலக்குறைவால் கடந்த 5ம் தேதி இரவு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு உயிரிழந்தார்.
அவரது உடல் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, இரவு புகழேந்தியின் உடல், அவரது சொந்த ஊரான விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமையில் அக்கட்சியினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை 10:30 மணிக்கு புகழேந்தியின் உடல் வீட்டிலிருந்து, இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. 11:15 மணிக்கு, தென்பெண்ணை ஆற்றங்கரையோர இடுகாட்டில் இறுதி சடங்குகள் நடந்தது.
அப்போது, போலீஸ் குழுவினரின் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது மகன் செல்வகுமார், தந்தைக்கு இறுதி சடங்கை நிறைவேற்றிட, உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதி சடங்கில், அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ், மாசிலாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் சேர்மன் ஜனகராஜ் உட்பட ஏராமான கட்சியினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
கடையடைப்பு
புகழேந்தி எம்.எல்.ஏ., மறைவையொட்டி, விக்கிரவாண்டி வர்த்தகர் சங்கம் சார்பில் கடையடைப்பு, 'இண்டியா' கூட்டணி கட்சி சார்பில் தி.மு.க., நகர செயலாளர் நைனா முகமது தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தில் பேரூராட்சி சேர்மன் அப்துல்சலாம், துணை சேர்மன் பாலாஜி, நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், ஹரிஹரன், நகர தலைவர் தண்டபாணி, துணைச் செயலாளர்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.

