/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
5000 ஆண்டுகள் பழமையான கற்கோடாரி கண்டுபிடிப்பு
/
5000 ஆண்டுகள் பழமையான கற்கோடாரி கண்டுபிடிப்பு
ADDED : செப் 06, 2024 12:22 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே 5000 ஆண்டுகள் பழமையான கற்கோடாரியை வரலாற்று ஆய்வாளர் கண்டெடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த முட்டத்துார் கிராமத்தில், பழமையான பானை ஓடுகள் இருப்பது குறித்து வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவர் நேற்று முன்தினம் அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 5000 ஆண்டுகள் பழமையான கற்கோடாரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து செங்குட்டுவன் கூறியதாவது: முட்டத்துார் - கல்யாணம்பூண்டி எல்லையில் மலையடிவாரத்தில் கள ஆய்வு செய்தோம். அப்போது புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடரி கண்டறியப்பட்டது. இக்கருவி 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். வேட்டை கால மக்கள் வேளாண் சமூகத்துக்கு மாறியபோது இதுபோன்ற பட்டைத் தீட்டப்பட்ட வழுவழுப்பான கற் கோடரிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, உடையாநத்தம், தி.தேவனுார், பாக்கம் மலைப் பகுதிகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில் தற்போது இங்கும் அதற்கான தடயம் கிடைத்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில் உள்ள எழுத்துப் பாறையில் 5000 ஆண்டுகள் பழமையான வெண் சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டது.
மேலும், முட்டத்துார் - கல்யாணம்பூண்டி எல்லையில் உள்ள இந்த பகுதி முழுதும் பானை ஓடுகள் காணப்படுகின்றன. 1000 ஆண்டுகளுக்கு முன் இங்கு மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். தற்போது புதிய கற்காலக் கருவி கண்டறியப்பட்டிருப்பது இதனை உறுதிப்படுத்துகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்பரப்பு ஆய்வு மற்றும் அகழாய்வு நடத்த வேண்டும். அப்போது மேலும் பல தடயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தொல்லியல் துறையும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.