/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி அருகே 700 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
/
செஞ்சி அருகே 700 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
செஞ்சி அருகே 700 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
செஞ்சி அருகே 700 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
ADDED : செப் 09, 2024 05:54 AM

செஞ்சி: செஞ்சி அருகே 700 ஆண்டு பழமையான கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கருங்குழி கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சுதாகர் தலைமையில், செஞ்சி அரசு கலைக்கல்லுாரி தமிழ்துறை மாணவர்கள் கமலேஷ், கார்த்திக் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில் இரண்டு புதிய கல்வெட்டுக்கள் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.
இது குறித்து சுதாகர் கூறியதாவது:
கருங்குழி கிராமத்தில் உள்ள மலை பாறைகளுக்கு இடையே உள்ள குகை ஒன்றில் சம்புவராயர் கால எழுத்தமைதி கொண்ட நான்கு வரி கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு 700 ஆண்டுகள் பழமையானது.
இந்த கல்வெட்டில், 'திருவாய்ப்பாடியில் இராசநாராயணக் களபாளர் விடுதி, இவ்விடுதியில் விடுமவ(ர்)கள் செய்யங்கநல்லுார் கல்லுவெட்டு' என்ற வாசகம் உள்ளது.
இது இராசநாராயண சம்புவராயர் காலத்தில், இராசநாராயண களப்பாளர் விடுதியில் செய்யங்க நல்லூரைச் சேர்ந்தவர்கள் விடப்பட்டனர் அல்லது தங்க வைக்கப்பட்டனர் என்று பொருள்படும்.
இங்கு குறிப்பிடப்படும் இராசநாராயண களப்பாளர் என்பவர் இராசநாராயண சம்புவராயரின் அதிகாரி ஆவான். இவன் 'களப்பிரர்' அரச வம்சாவழியைச் சேர்ந்தவன் ஆகலாம்.
இதில் குறிப்பிடும் திருவாய்ப்பாடி என்பது திருமால்பாடி என்று தற்போது அழைக்கப்படுகிறது.
தேசூர் அருகே உள்ள இவ்வூரில் பள்ளி கொண்ட பெருமாள் கோவிலும், இராசநாராயண சம்புவராயர் கால கல்வெட்டுகளும் உள்ளன. திருமால்பாடிக்கும் கருங்குழிக்குமான தொடர்பை இந்த கல்வெட்டு குறிக்கிறது. செய்யங்கநல்லுார் என்பது எந்த ஊர் என்று அறிய இயலவில்லை.
எதற்காக விடுதி அமைத்தார்கள் என்ற விபரமும் அறிய முடியவில்லை. இருப்பினும் இக்கல்வெட்டில் இடம் பெறும் 'விடுதி என்பது தங்க இடமும், உணவும் வழங்கும் இடமாகும் என்பதை அறியமுடிகிறது.
இதுவரை கிடைத்த கல்வெட்டுகளில் விடுதியைப்பற்றிய செய்தியைக் கூறும் கல்வெட்டு இதுவரை தமிழ்நாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே மலையில் மற்றொரு பகுதியில் உள்ள குகை போன்ற அமைப்பில் ஒரு பலகைக்கல்லில் சக்கரம் பொறிக்கப்பட்ட திருவாழிக்கல்லில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் காலம் 14ம் நுாற்றாண்டாக இருக்கலாம்.
இக்கல்வெட்டில் பொன்னுார் பற்றைச் சார்ந்த கருங்குழை என்ற ஊரில் உள்ள பெருமாள் ஸ்ரீரங்கநாதருக்கு திருவிடையாட்டம் ஆக விடப்பட்ட தானம் குறித்து தவகல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருங்குழியில் கிடைத்த கல்வெட்டு இப்பகுதியில் தங்கும் இடம் பற்றிய செய்தியை சொல்லி இருப்பது சிறப்பானதும், அறிய செய்தியாகவும் உள்ளது. இதனை தமிழ்நாட்டு தொல்லியல் துறை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.