ADDED : ஜூன் 25, 2026 09:30 PM
நெல் மூட்டைகள் மழையில் நனைவதாக விவசாயிகள்... கொள்முதல் நிலையங்களில் ஷெட் அமைக்க கோரிக்கை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்கள், விற்பனை கூடங்களால், பல்லாயிரக்கணக்கான, நெல் மூட்டைகள் நனைவதை தடுக்க ‘ஷெட்’ அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் தலைமையில், மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:
இந்தாண்டு வறட்சியால், மாவட்டத்தில் பயிர்கள் பாதித்து நஷ்டமடைந்தவர்களுக்கு, நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்.
மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக, ‘திடீர்’ மழை பெய்ததால், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும், வேளாண் விற்பனை கூடங்களிலும் வைத்திருந்த நெல்மணிகள் நனைந்து வீணாகியுள்ளது.
மாவட்டம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் கூடாரமின்றி, தார்ப்பாய் வசதியின்றி திறந்த வெளியாக நெல் வைத்திருப்பதால் நனைவது வாடிக்கையாக உள்ளது. இதனால், நெல் கொள்முதல் நிலையங்கள், விற்பனை மையங்களில் நிரந்தரமான ‘ஷெட்’ அமைக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளுக்கு ஒரு வாரத்தில் பண பட்டுவாடா செய்ய வேண்டும்.
விழுப்புரம் அருகே திருவாமாத்துார் பெரிய ஏரி மதகு உடைந்து, 5 ஆண்டுகளாகியும் சீர்படுத்தாமல் நீர் வீணாகி வருகிறது. அதற்கு ‘டெண்டர்’ விட்டும் கிடப்பில் போட்டுள்ளனர்.
ஏனாதிமங்கலம் பகுதியில் கடந்த ‘பெஞ்சல்’ புயலின்போது, உடைந்துபோன மின்கம்பங்களை அமைக்காமல், மின்துறையினர் அலைகழிப்பதால் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட முடியாமல் தவித்து வருகின்றனர்.
மூடப்பட்ட புதுச்சேரி சர்க்கரை ஆலையை நம்பிய விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் கரும்பினை, அவரவர் விரும்பும் ஆலைக்கு அனுப்ப முடியாமல் நீண்டகாலம் போராடுகின்றனர். 150 கி.மீ., தொலைவில் உள்ள படாலம் ஆலைக்கு அனுப்புவதை விடுத்து, விழுப்புரம் மாவட்ட ஆலைக்கே அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயத்திற்கு மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும். தட்கல் விவசாய மின் இணைப்புக்கு, ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பலர் கட்டணம் செலுத்தி நீண்டகாலம் காத்திருக்கின்றனர். ஏன் இணைப்பு வழங்குவதில்லை. விவசாயிகள் கோரிக்கை மனுக்கள் மீது பல துறைகள் பதில் தருவதில்லை.
குறிப்பாக, பி.டி.ஓ., அலுவலகங்களில் அலட்சியம் செய்கின்றனர். வேளாண்துறை, வேளாண் அறிவியல் நிலையத்தினர் விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதில்லை. சில ஏஜெண்டுகளை வைத்து பயிற்சி நடத்தி வருகின்றனர்.
மழை வெள்ள பாதிப்பு, இயற்கை விவசாயம் குறித்து பயிற்சியளிக்கலாம். உரத்தின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால், இயற்கை பசுந்தால் உரத்தை மேற்கொள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விதைகள் வழங்க வேண்டும்.
ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றாமல் பாதிக்கிறது. சாலாமேடு பொன்னேரியில் கழிவுநீரை விடுவதால், துர்நாற்றமும், நிலத்தடி நீரும் பாதிக்கிறது.
சிறுவந்தாடில் உள்ள வேளாண் விற்பனை மையம் நீண்ட காலம் மூடி கிடப்பதால், அதனை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்காவது பயன்படுத்த வேண்டும்.
விவசாய ஊக்கநிதி திட்டத்தில், அப்டேட் செய்யாமல் நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும். வீடூர் அணை நீர் பாசனத்திற்காக மட்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இந்த கோரிக்கைகள் குறித்து, அந்தந்த துறையினரிடம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
