/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., நிர்வாகி கொலை தி.மு.க., பிரமுகர் கைது
/
அ.தி.மு.க., நிர்வாகி கொலை தி.மு.க., பிரமுகர் கைது
ADDED : ஜூன் 23, 2024 05:43 AM

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டையில் கணவன் மனைவிக்குமிடையே ஏற்பட்ட தகராறில் பஞ்சாயத்து செய்ததால் ஏற்பட்ட விரோதத்தில் கட்டையால் அடித்து அ.தி.மு.க., நிர்வாகி கொலை செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை, முனியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் மகன் கோபிநாத், 28; திருமணமாகாதவர். அ.தி.மு.க., இளைஞரணி செயலாளர். அதே ஊரைச் சேர்ந்தவர் தி.மு.க.,1வது வார்டு செயலாளர் ஆறுமுகம் மகன் தியாகு, 38; இருவரும் நண்பர்கள்.
தியாகுவின் மனைவி மாற்றுத்திறனாளி, கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனை கோபிநாத் தலையிட்டு பஞ்சாயத்து பேசினார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
கடந்த 20ம் தேதி தியாகுவின் பாட்டி தனலட்சுமி வயது மூப்பு காரணமாக இறந்தார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற கோபிநாத், தியாகுவிற்குமிடையே தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த தியாகு, கோபிநாத்தை கட்டையால் தாக்கினார். படுகாயமடைந்த கோபிநாத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
இதுகுறித்து கோபிநாத்தின் தாய் கீதா, 57; கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தியாகுவை கைது செய்தனர்.