/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி பா.ம.க., வழக்கறிஞர் பாலு கோரிக்கை
/
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி பா.ம.க., வழக்கறிஞர் பாலு கோரிக்கை
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி பா.ம.க., வழக்கறிஞர் பாலு கோரிக்கை
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி பா.ம.க., வழக்கறிஞர் பாலு கோரிக்கை
ADDED : ஜூன் 21, 2024 04:34 AM

விக்கிரவாண்டி : 'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி, அரசு வேலை வழங்க வேண்டும்' என பா.ம.க., கோரிக்கை விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்து 38 பேர் இறந்தனர். மேலும், பலர் விக்கிரவாண்டி, சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பா.ம.க., வழக்கறிஞர் பாலு பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும், டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இது வரை 38 பேர் இறந்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்பனை மலைப் பகுதியில் அல்ல. நகரத்தில் மைய பகுதியில் கருணாபுரம் என்ற பகுதியில் நீதிமன்றத்தின் அருகே நடந்துள்ளது.
அங்கு கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராசு என்ற சாராய வியாபாரி விற்றுள்ளார். அவருக்கு ஆளும் தி.மு.க., எம்.எல்.ஏ., க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், அமைச்சர்கள் வேலு, முத்துசாமி உள்ளிட்ட ஆளும் கட்சியினர் பின்னணியில் இருந்துள்ளனர்.
ஏற்கனவே மரக்காணம் கள்ளச்சாராய சாவில் சாராய வியாபாரி மருவூர் ராஜா என்பவருக்கு அமைச்சர் மஸ்தான் அரசியல் பின்னனியில் இருந்தார்.
தற்போது, போலீசாரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆனால் கலெக்டர் இது கள்ளச்சாராய சாவு அல்ல வயிற்று வலியால் ஏற்பட்ட மரணம் என தவறான தகவலை கூறிய அவர் இதுவரை சஸ்பெண்ட் செய்யவில்லை.
கள்ளச்சாராயத்தை முழுமையாக அழித்து விட்டோம் என கூறிய தி.மு.க., ஆட்சியில் இவ்வளவு பெரிய அலங்கோலம் நடைபெற்றுள்ளது. சாவின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போவது கவலை அளிக்கிறது. தமிழக அரசு இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதை 25 லட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு வழக்கறிஞர் பாலு கூறினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் அன்புமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.