/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சம்பளம் இன்றி பணிபுரிந்து அசத்தும் வாலிபர் அரசு டவுன் பஸ்கள் விபரம் அனைத்தும் அத்துப்படி
/
சம்பளம் இன்றி பணிபுரிந்து அசத்தும் வாலிபர் அரசு டவுன் பஸ்கள் விபரம் அனைத்தும் அத்துப்படி
சம்பளம் இன்றி பணிபுரிந்து அசத்தும் வாலிபர் அரசு டவுன் பஸ்கள் விபரம் அனைத்தும் அத்துப்படி
சம்பளம் இன்றி பணிபுரிந்து அசத்தும் வாலிபர் அரசு டவுன் பஸ்கள் விபரம் அனைத்தும் அத்துப்படி
ADDED : ஆக 06, 2024 07:01 AM

விழுப்புரம் நகரில், தானாக முன்வந்து பஸ் டைம் கீப்பராக பணியாற்றும் வாலிபரை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்குமார், 25; பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன் இறந்ததால் படிப்பை தொடர முடியவில்லை. இவரது தாய், விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் பூ வியாபாரம் செய்து, குடும்பத்தை நடத்தி வருகிறார். விக்னேஷ்குமார், தனது தாய்க்கு துணையாக தினமும் பழைய பஸ் நிலையத்திற்கு வந்து சென்றுள்ளார்.
அப்போது, கிராமப்புற மக்கள் பலரும் இவரது பூக்கடைக்கு வந்து, தங்கள் ஊர் பஸ் எப்போது வரும் என கேட்பது வழக்கம். உடனே விக்னேஷ்குமார், பக்கத்தில் உள்ள டைம் கீப்பர் அலுவலகத்திற்கு சென்று, பஸ் நேரத்தை கேட்டு வந்து, கிராம மக்களிடம் கூறுவார். இவரது ஆர்வத்தைப் பார்த்து, இவரை டைம் கீப்பர் அலுவலகத்தில் உதவியாளராக சேர்த்துக் கொண்டனர்.
காலப்போக்கில், பழைய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த அரசு பஸ் டைம் கீப்பர் அலுவலகம் மூடப்பட்டது. இருப்பினும் பழக்க தோஷத்தை மறக்காமல், தினமும் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு, சென்னை மார்க்க பஸ் நிறுத்த பகுதியில், காக்கி பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து ஏறக்குறைய டிராபிக் போலீஸ் போன்று விக்னேஷ்குமார், டைம் கீப்பராக பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார். யார், எந்த ஊர் பஸ் பற்றி கேட்டாலும் கூறி அசத்தி வருகிறார். அதுமட்டுமின்றி அவ்வப்போது டிராபிக்கையும் சரி செய்து வருகிறார்.
விழுப்புரத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அத்தனை டவுன் பஸ்களின் எண்ணையும் தடுமாற்றமின்றி உடனுக்குடன் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'என்னை யாரும் பணியில் அமர்த்தவில்லை. நானாக முன் வந்து கிராம மக்கள் செல்ல வேண்டிய பஸ் நெம்பர் மற்றும் ஊர் ஆகியவற்றை கூறி உதவி செய்கிறேன். எனக்கு சம்பளம் ஏதும் கிடையாது.
எனது பணியை பார்த்து, தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் 10, 20 ரூபாய் என கொடுக்கின்றனர்.
வேலை கிடைக்காவிட்டாலும், படிக்க தெரியாத கிராம மக்கள் பலரும் பஸ் நிறுத்த பகுதியில் தவிப்பதை பார்த்து தானே முன் வந்து இந்த பணியை செய்கிறேன்' என்றார் புன்னகையுடன்.
- நமது நிருபர்-