/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 27, 2024 12:31 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தமிழக அரசின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பழனி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, கடந்த 2015-ம் ஆண்டு முதல், ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று “ முதலமைச்சர் மாநில இளைஞர் விருது “ வழங்கப்பட்டு வருகிறது. 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் உள்ளடக்கியதாக இருக்கும். அதன்படி 2024-ம் ஆண்டிற்கான, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, வரும் 15.8.2024ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. எனவே, இவ்விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையத்தில் (www.sdat.tn.gov.in) மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 1.5.2024 முதல் 15.5.2024 அன்று மாலை 4.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பிக்கும் தகுதிகள்: 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண். கடந்த நிதியாண்டில் 1.4.2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம், 5 ஆண்டுகள், தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.5.2024 மாலை 4.00 மணி ஆகும். இதர விபரங்களை இணைய தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

