/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் - நாகை நான்கு வழிசாலை பணி முழுவதும் முடிக்காமல் கட்டணம் வசூலிக்க ஏற்பாடு
/
விழுப்புரம் - நாகை நான்கு வழிசாலை பணி முழுவதும் முடிக்காமல் கட்டணம் வசூலிக்க ஏற்பாடு
விழுப்புரம் - நாகை நான்கு வழிசாலை பணி முழுவதும் முடிக்காமல் கட்டணம் வசூலிக்க ஏற்பாடு
விழுப்புரம் - நாகை நான்கு வழிசாலை பணி முழுவதும் முடிக்காமல் கட்டணம் வசூலிக்க ஏற்பாடு
ADDED : பிப் 23, 2025 05:35 AM

விக்கிரவாண்டி : விழுப்புரம் - கடலுார் நான்கு வழிச்சாலை பணி முழுமை பெறாத நிலையில், முன்பாதியை திறந்து சுங்க கட்டணம் வசூலிக்க நகாய் முடிவு செய்துள்ளது. பின் பாதியில் பாலங்கள் அனைத்தும் பராமரிப்பு பணியால் சாலை திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 179.5 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு 6,431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. பணிகளை விரைந்து முடித்திட நான்கு கட்டங்களாக பிரித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 'நகாய்' ஒப்பந்தம் செய்தது.
முதல் கட்டமாக விழுப்புரம் - எம்.என்.குப்பம் வரை 2 சிறு பாலங்கள் மற்றும் 14 மேம்பாலங்களுடன் 1400 கோடி ரூபாய் மதிப்பிலும், 2ம் கட்டமாக எம்.என்.குப்பத்தில் இருந்து கடலுார் பூண்டியாங்குப்பம் வரை 10 சிறு பாலங்கள் மற்றும் ஆற்றின் குறுக்கே 3 பெரிய பாலங்கள், 18 மேம்பாலங்களுடன் 1600 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை, திலீப் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்தார் ஒப்பந்தம் எடுத்து பணியை செய்து முடித்தனர்.
அதில், விழுப்புரம் - எம்.என்.குப்பம் வரை 29 கி.மீ., துாரத்திற்கு பணி முடிந்ததை நகாய் அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினர். அதனையொட்டி இச்சாலையில் கெங்கராம்பாளையம் அருகே அமைக்கப்பட்டுள்ள டோல்கேட் கடந்த ஜனவரி மாதம் திறக்க திட்டமிட்ட நிலையில், பாலங்களில் ஆங்காங்கே பழுது ஏற்பட்டதால் டோல் கேட் திறப்பதை ஒத்திவைத்தனர்.
தற்போது, விழுப்புரம் முதல் எம்.என்.குப்பம் வரை பராமரிப்பு பணி முடிவடைந்ததையொட்டி, வரும் 26 அல்லது 28ம் தேதி, சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக திறக்க திட்டமிட்டுள்ளனர். அன்று முதல், 29 கி மீ., துாரத்திற்கு மட்டும் சுங்க வரி பயணிகளிடம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எம்.என்.குப்பம் முதல் பூண்டியாங்குப்பம் வரையிலான சாலையில் உள்ள சிறுபாலங்கள், மேம்பாலங்களை நகாய் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அதிகாரிகள் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் தற்போது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எம்.என்.குப்பம், செம்பியன்பாளையம், உறுவையாறு, புதுக்கடை, குமாரமங்கலம், மேல்அழிஞ்சிப்பட்டு, நாகப்பனுார், குருவிநத்தம், பாகூர், சோரியங்குப்பம் ஆகிய இடங்களில் மேம்பாலங்களி்ல் ஏற்பட்ட பழுதுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சில இடங்களில் முழுமையாகவும் சில இடங்களில் ஒரு புறத்திலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கடலுார் சாவடி பைபாஸ் முதல் குடிகாடு வரை 11 கி.மீ., துார சாலை முழுமையாக மூடப்பட்டு அனைத்து பாலங்கள் மற்றும் சாலை சீரமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
எம்.என்.குப்பம் முதல் கடலுார் வரை ஒருவழிப்பாதை போக்குவரத்தில் எதிரும் புதிருமாக வாகனங்கள் பயணிப்பதால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.
டோல்கேட் திறந்து கட்டணம் வசூலிப்பதில் ஆர்வம் காட்டும் நகாய் அதிகாரிகள், மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திட பாலங்கள் மற்றும் சாலைகள் சீரமைக்கும் பணியை விரைந்து முடிப்பதில் காட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.