ADDED : ஏப் 11, 2024 11:51 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்து வரும், அமைச்சர் பொன்முடி, பா.ம.க.,வையும், வி.சி.,யையும் உசுப்பேத்தும் விதமாக பேசுவதால் பா.ம.க.,வினர், சமூக வலைதளங்களில் வெளுத்து வாங்குகின்றனர்.
விழுப்புரம் அடுத்த திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் அமைச்சர் பொன்முடி வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பேசுகையில், 'சமூக நீதிக்கும், இட ஒதுக்கீடுக்கும் எதிரான கட்சி பா.ஜ., எல்லோரும் சமம் என்பதை ஏற்காத கட்சி. தமிழர்கள் முன்னேறக்கூடாது என நினைப்பவர் தான் மோடி. அப்படிப்பட்ட பா.ஜ.,வுடன் தான், பா.ம.க., கூட்டணி அமைத்துள்ளது.
'சேராத இடம் தன்னில் சேர்ந்தாயடா' என்ற ஒரு பாடல் வரும். அப்படி பா.ஜ.க., விடம் சேர்ந்துள்ளனர்.
இப்ப ஓட்டு கேட்க, ரெண்டு பேர் வருவார்கள். அதுல ஒருத்தர், ஜாதியைச் சொல்லி பேசுவார். அவர்கள், அந்த ஜாதிக்குமே எதையும் செஞ்சது இல்லை. யாருன்னு, தெரியுதா?' என கேட்டதும் கூடியிருந்த கட்சியினர் பா.ம.க., என குரல் எழுப்பினர்.
விழுப்புரம் தொகுதியில், பா.ம.க.., - வி.சி., இடையே நேரடி பிரசார கருத்து மோதல் இருந்து வரும் நிலையில், அதனை மேலும் உசுப்பேத்தும் வகையில் அமைச்சர் பொன்முடி கிராமப் பகுதிகளில் பேசி வருகிறார்.
இதற்கு, சமூக வலைதளங்களில், பா.ம.க.,வினர் எதிர் விமர்சனம் அளித்து வருகின்றனர். அதில், விழுப்புரம் மாவட்டத்திற்கு எதுவும் செய்யாத அமைச்சர் பொன்முடி, செம்மண் குவாரி உள்ளிட்ட பல்வேறு முறைகேடு வழக்கில் சிக்கி, நீதிமன்றத்திற்கு போய் தப்பி வந்துள்ளார்.
நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது என்பதை மறக்க வேண்டாம், தேவையில்லாமல் பா.ம.க.,வை சீண்ட வேண்டாம் என சமூக வலை தளங்களில் விமர்சனம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
