/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விபத்தில் கொத்தனார் பலி பொதுமக்கள் சாலை மறியல்
/
விபத்தில் கொத்தனார் பலி பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : பிப் 15, 2025 05:04 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் கார் மோதிய விபத்தில் கொத்தனார் இறந்ததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன், 47; கொத்தனார். இவர், நேற்று மாலை 6:30 மணிக்கு, கோலியனுாரில் கட்டட வேலை முடிந்து, மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார்.
கும்பகோணம் நெடுஞ்சாலையில், மேல்பாதி பஸ் நிறுத்தம் அருகே வளைவில் திரும்பியபோது, சென்னை நோக்கி சென்ற கார் மோதியது. படுகாயமடைந்த கன்னியப்பன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதனையறிந்த அவரது உறவினர்கள் மற்றும் மேல்பாதி கிராம மக்கள், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், இரவு 7:15 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த, விழுப்புரம் தாலுகா போலீசார், மறியல் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இப்பகுதியில், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, சேதமடைந்துள்ளதை சீரமைக்காததாலும், இரவு நேரங்களில் தெரு மின்விளக்கு வசதியும் இல்லாததாலும் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் உறுதியளித்ததால், 7:45 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.