/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிழற்குடை இன்றி பஸ் பயணிகள் கடும் அவதி
/
நிழற்குடை இன்றி பஸ் பயணிகள் கடும் அவதி
ADDED : மே 06, 2024 05:30 AM

விழுப்புரம் : விழுப்புரம் புறநகர் பகுதி முக்கிய நெடுஞ்சாலை சந்திப்புகளில், நீண்டகாலமாக நிழற்குடையின்றி, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால், தற்காலி நிழல் பந்தல் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 10 நாட்களாக வழக்கத்திற்கு மாறாக 100 டிகிரியைக் கடந்து 108 டிகிரி வரை பதிவாகி வருகிறது. காலை 10:00 மணிக்கு துவங்கும் வெயிலின் தாக்கம், பகல் 12:00 மணிக்கு பிறகும் சுட்டெரித்து வாட்டி வதைத்து வருகிறது.
மாலை 5:00 மணி வரை இந்த கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். பஸ்சுக்காக அவர்கள் காத்திருக்கும் இடங்களில் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் நிழற்குடைகள் இல்லாமல் உள்ளது.
விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் கோலியனுார் கூட்ரோடு சந்திப்பில், விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, கடலுார் - கும்பகோணம் மார்க்கங்களுக்கு செல்ல விழுப்புரம், வளவனுார், கோலியனுார் சுற்றுப்பகுதி மக்கள் ஏராளமானோர் பஸ்சுக்காக காத்திருந்து செல்கின்றனர்.
இவர்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலையில், கோலியனுார் கூட்ரோடு பகுதியில், நான்கு சாலை மார்க்கங்களிலும், நீண்டகாலமாக பஸ் நிறுத்த நிழற்குடை இல்லாமல் உள்ளது.
விக்கிரவாண்டி - கும்பகோணம் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக பஸ் நிறுத்த நிழற்குடைகள் அகற்றிய நிலையில், நான்கு வழிச்சாலை பணிகளும் கிடப்பில் போட்டுள்ளதால், அங்கு நிழற்குடையும் அமைக்கப்படாமல் உள்ளது.
இப்போது, கோடை வெயில் வாட்டி வதைப்பதால், அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
அதேபோல், விழுப்புரம் முத்தாம்பாளையம் (சென்னை-திருச்சி நெடுஞ்சாலை) பைபாஸ் சந்திப்பு, விழுப்புரம் பைபாசில் செஞ்சி-திருவண்ணாமலை நெடுஞ்சாலை சந்திப்பு என பல இடங்களில், பஸ் நிறுத்த நிழற்குடைகள் இல்லாமல் உள்ளது.
இந்த இடங்களில், பொது மக்களின் நலன் கருதி, அரசு தரப்பில் உடனடியாக நிழற்குடைகள் அமைக்க வேண்டும். கோடைக்கு தண்ணீர் பந்தல் திறக்கும் அரசியல் கட்சியினர், இது போன்ற இடங்களில் தற்காலிகமாக இந்த கோடை வெயிலுக்கு கீற்று கொட்டகை அமைக்கலாம்.
அரசு தரப்பில், உள்ளாட்சி அமைப்புகள் மூலம், அங்கு தற்காலிக கொட்டகைகள் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.