/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்கள் கட்சியினருக்கு கலெக்டர் வேண்டுகோள்
/
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்கள் கட்சியினருக்கு கலெக்டர் வேண்டுகோள்
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்கள் கட்சியினருக்கு கலெக்டர் வேண்டுகோள்
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்கள் கட்சியினருக்கு கலெக்டர் வேண்டுகோள்
ADDED : ஜூன் 15, 2024 06:18 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:
தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டும். பிரசாரத்தின்போது, எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ, ஜாதியையோ, மதத்தையோ குறிப்பிட்டு வெறுப்பைத் துாண்டும் வகையில், பகைமையை வளர்க்கும் வகையான நடவடிக்கைளில் ஈடுபடக்கூடாது.
பிற கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யும்போது, தலைவர்களின் பொது வாழ்க்கை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருத்தல் கூடாது.
வழிபாட்டுத் தலங்கள் குறித்த பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல், ஆள் மாறாட்டம் செய்தல் கூடாது.
தேர்தல் பணிக்காக வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு, தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். ஒரு வேட்பாளருக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதியை வேறு வேட்பாளர் பயன்படுத்தக் கூடாது.
தனி நபருக்கு சொந்தமான இடங்களில், கட்ட டங்களில், சுவர்களில் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடுதல், பதாகை வைத்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல்போன்ற செயல்களை செய்யக்கக்கூடாது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் தொடங்கப்பட்ட திட்டங்களை மேற்கொள்ளலாம். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பகுதிகளில் நிவாரணம் வழங்கலாம்.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தேர்தல் கூட்டங்கள் நடத்திட வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது.
தேர்தல் நடத்தை தொடர்பான புகார் அல்லது பிரச்னையை மாவட்ட தேர்தல் அலுவலர் அல்லது தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்க வேண்டும். இடைத்தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தேர்தல் சுமுகமாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி பேசினார்.
எஸ்.பி., தீபக் சிவாச், தேர்தல் பிரிவு அலுவலர் தமிழரசன், அ.தி.மு.க., பசுபதி, தி.மு.க., சுரேஷ், காங்., ரமேஷ், பா.ஜ., சுகுமார், தே.மு.தி.க., குமார், கம்யூ., முருகன், பகுஜன் சமாஜ் கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.