/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊராட்சி துணைத் தலைவர் மீது பெண் தலைவர் புகார் மனு
/
ஊராட்சி துணைத் தலைவர் மீது பெண் தலைவர் புகார் மனு
ADDED : செப் 04, 2024 12:11 AM
விழுப்புரம் : செஞ்சி அருகே ஊராட்சி பணிகளுக்கு தடையாகவும், தீண்டாமையை கடைபிடிக்கும் துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடி இருளர் பெண் ஊராட்சி தலைவர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து, செஞ்சி அடுத்த ஆனாங்கூர் ஊராட்சி தலைவர் ஏழுமலை மனைவி சங்கீதா, 40; நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த நான், ஆனாங்கூர் ஊராட்சி தலைவராக உள்ளேன். எங்கள் கிராமத்தில் 6 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில், பிற சமூகத்தைச் சேர்ந்த சித்ரா துணைத் தலைவராக உள்ளார். அவரது கணவர் தி.மு.க., கிளைச் செயலாளர் குணசேகர், நான் தலைவராக பொறுப்பேற்றது முதல் என்னை மக்கள் பணி செய்ய விடாமலும், நிர்வாகத்தை சரியாக நடத்தாமலும் தடுத்து வருகிறார்.
மேலும், மின்சாரம், குடிநீர், சாலைப் பணி மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு ஊதியம் விடுவிப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு நிதி பெற, 'டிஜிட்டல் கீ' தராமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். நான், இருளர் சமூகம் என்பதால், மக்கள் முன்னிலையில்அவமதித்தும், தலைவர் நாற்காலியில் அமரக்கூடாது. ஊராட்சி நிர்வாகப் பணியை செய்யக்கூடாது என இழிவாக பேசி வருகின்றனர். வல்லம் பி.டி.ஓ., அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது குறித்து நடவடிக்கை எடுத்து, ஊராட்சி நிர்வாகத்தில் துணைத் தலைவர் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து, முழு அதிகாரத்தையும் எனக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.