ADDED : ஏப் 30, 2024 06:16 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் போலீஸ் தாக்கியதால் கூலித் தொழிலாளி இறந்ததாகவும், அதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க வேண்டும் என, அவரது குடும்பத்தினர் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து, இறந்த கூலித் தொழிலாளியின் மனைவி அஞ்சு, 35; மற்றும் விழுப்புரம் சமூகநல அமைப்பு நிர்வாகிகள் நேற்று கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனு:
விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 43; இவர், திருப்பச்சாவடிமேடு டாஸ்மாக்கடை கேன்டீனில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 9ம் தேதி வேலைக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. விசாரித்ததில், விழுப்புரம் தாலுகா போலீசார் பிடித்துச்சென்றது தெரிந்தது. இதனையடுத்து, மறுநாள் 10ம் தேதி பகல் 12:00 மணிக்கு, ஒருவர் ராஜாவை அழைத்து வந்து வீட்டில் விட்டுச் சென்றார்.
அப்போது, அவரிடம் விசாரித்தபோது, எந்த தவறும் செய்யாத தன்னை போலீசார் அழைத்துச் சென்று தாக்கியதாக கூறியபடி மயங்கி விழுந்தார். உடனே, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ராஜா இறந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்து, விழுப்புரம் மேற்கு போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்தனர். போலீசார் தாக்கியதால், ராஜா இறந்துள்ளதாக மனைவி அஞ்சு புகார் கூறியதால், விழுப்புரம் தாலுகா போலீசார், ராஜா உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து உடலை வழங்கினர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் 9ம் தேதி, ராஜாவை பிடித்துச்சென்று தாக்கியதில் அவர் இறந்துள்ளார். அவரது உடம்பில் ரத்த காயம் இருந்தது. ஆனால், போலீசார் மறுக்கின்றனர். மேலும், வழக்கு பதியப்பட்டதில், வீட்டில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் தான் ராஜா இறந்ததாக பதிவு செய்துள்ளனர்.
காவல் நிலைய சித்ரவதையால் இறந்த, இந்த சந்தேக மரண வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றவும், நீதித்துறை நடுவர் விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

