ADDED : மே 22, 2026 07:43 PM
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர், அனைத்து நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசியதாவது:
நீர்வளத்துறை, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறைகளுக்கு சொந்தமான ஏரி மற்றும் குளங்களை ஆய்வு செய்து பருவமழைக்கு முன்பாகவே அவற்றில் துார்வாரும் பணிகள், கரைகள் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்..
அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊரகப் பகுதிகளில் சாலைப் பணிகள், தெரு விளக்கு, குடிநீர் தேவைப்படும் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைத்து தருவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை மூலமாக வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளை நடுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விழுப்புரம் நகராட்சி, திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
