/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., குடும்ப கட்சிதான்: அடித்துச் சொல்கிறார் பொன்முடி
/
தி.மு.க., குடும்ப கட்சிதான்: அடித்துச் சொல்கிறார் பொன்முடி
தி.மு.க., குடும்ப கட்சிதான்: அடித்துச் சொல்கிறார் பொன்முடி
தி.மு.க., குடும்ப கட்சிதான்: அடித்துச் சொல்கிறார் பொன்முடி
ADDED : ஜூன் 15, 2024 04:47 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று நடந்த, தெற்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, விக்கிரவாண்டி வேட்பாளர் சிவா ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து, அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
கவுதம சிகாமணி 25 ஆண்டுகளுக்கு முன்பே விழுப்புரத்தில் தளபதி நற்பணி மன்றத்தை துவக்கி, கட்சிக்காக பணியாற்றி வருகிறார்.
அதனால் தான் தலைவர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் அவரை மாவட்ட செயலாளராக அடையாளம் காட்டியுள்ளனர்.
கடந்த 1989ம் ஆண்டு முதல் கட்சிக்காக பணியாற்றி வரும் சிவாவையும் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
முதல்வர் அடையாளம் காட்டியுள்ள இவர்களுக்காக, நீங்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவர்களுக்கு முதல் சவாலாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமைந்துள்ளது.
இந்த தொகுதியில் மறைந்த ராதாமணி, புகழேந்தி ஆகியோர் தீவிரமாக மக்கள் பணியாற்றியுள்ளனர்.
அந்த பணியை கவுதம சிகாமணியும், சிவாவும் சிறப்பாக தொடர வேண்டும்.
கட்சி நியமனங்கள் குறித்து, பலர் பேசுவதை துாக்கியெறிந்து விட்டு முதல்வரை மனதில் நிறுத்தி பணியாற்ற வேண்டும்.
லோக்சபா தேர்தலில் வி.சி.,க்கு வாங்கிய ஓட்டுகளைவிட, தி.மு.க., வுக்கு அதிகம் பெற்று மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும். விக்கிரவாண்டியில் தி.மு.க., வெற்றி உறுதியாகி விட்டது.
தோல்வியை தெரிந்து கொண்ட எதிர்க் கட்சிகள் போட்டியிடலாமா என யோசனையில் உள்ளனர். சிவா நீண்ட காலமாக கட்சிப் பணியாற்றி வருகிறார்.
அவரது தந்தை அரியபுத்திரன் அரசு ஊழியராக இருந்தும், நான் தேர்தலில் நின்றபோது வந்து பணியாற்றியவர்.
தி.மு.க., என்றால் குடும்ப கட்சிதான். குடும்பம், குடும்பமாக, காலம் காலமாக உழைப்பவர்கள். கட்சிக்காகவும், மக்களுக்காகவும் பாடுபடுபவர்கள்.
தலைவர் குடும்பம், எனது குடும்பம், இதோ அரியபுத்திரன், ஜெயராமன் குடும்பங்கள் என பல உதாரணங்களை குறிப்பிடலாம்.
சீட் கிடைக்கா விட்டாலும், புஷ்பராஜ், ஜனகராஜ் போன்றவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இடைத்தேர்தல் வெற்றிக்காக, அனைத்து கட்சியினரிடமும் பேசி, ஓட்டு சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு பொன்முடி பேசினார்.