தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வலியுறுத்தல் 

வலியுறுத்தல் 

வலியுறுத்தல் 


ADDED : மே 27, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 06:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 பயிர் கடன் தள்ளுபடியை மறுபரிசீலனை செய்ய...  விழுப்புரத்தில் தொடரும் விவசாயிகள் போராட்டம்

விழுப்புரம்:  தமிழக அரசின் பயிர் கடன் தள்ளுபடியை மறுபரிசீலனை செய்து, அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் விதத்தில் அறிவிக்க வேண்டும் என்று, விழுப்புரத்தில் விவசாயிகள் கூட்டமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வர் விஜய், தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி விவசாய கடன் தள்ளுபடியை அறிவித்தார். ஆனால், ரூ.50 ஆயிரம் கடன் பெற்ற சிறு விவசாயிகளின் கடன் தொகை மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், த.வெ.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்திலும், விவசாய கடன் தள்ளுபடியில் பாரபட்சத்தை கண்டித்து விவசாய சங்கங்கள் கண்டனம் தெரிவித்தும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பினர், நேற்று முன்தினம் விழுப்புரம் நகராட்சி திடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினர், நேற்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கலிவரதன், செயலாளர் முருகையன், பொருளாளர் நாகராஜன் தலைமையில், நேற்று காலை 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திலிருந்து வெளியே நுழைவு வாயில் பகுதி வரை கண்டன பேரணியாக வந்தனர். பகல் 11:00 மணிக்கு திருச்சி சாலையில் அமர்ந்து, விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வர் விஜய், தேர்தல் பிரசாரத்தின் போது, வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், பிற விவசாயிகள் பெற்ற 50 சதவீதம் தள்ளுபடி என்றும் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், தற்போது முதல்வராக ஆன பிறகு வெளியிட்ட பாரபட்சமான அறிவிப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால், முதல்வர் கடன் தள்ளுபடி அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

 விழுப்புரம் மேற்கு போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை, சிறிது நேரத்தில் அப்புறப்படுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, விவசாய சங்கத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: தமிழக முதல்வர் விஜய், தனது தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும், பிற விவசாயிகளின் 50 சதவீதம் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், தற்போது பாரபட்சமாக ரூ.50 ஆயிரம் கடன் பெற்றவர்களுக்கு மட்டும் தள்ளுபடி, பிற விவசாயிகளுக்கு ரூ.5,000 தள்ளுபடி என்பது பாரபட்சமான அறிவிப்பு. 

இதனால், ஒரு விவசாயியும் பயன்பெற முடியாது. கடந்த காலங்களில் ஏக்கர் கணக்கிட்டு தள்ளுபடி அறிவிப்பு இருந்தது. தற்போது, கடன் தொகையை கணக்கிட்டு தள்ளுபடி என்பது ஏமாற்று வேலை. வங்கியில் குறைந்தபட்ச பயிர் கடன் தொகையே ரூ.75 ஆயிரம் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு கடனே வழங்குவதில்லை. விவசாயிகள் பயிருக்கு வாங்கிய கடன் வட்டி தவணை தவறி தவிக்கின்றனர். இதனால், விவசாயிகள் முழுமையாக பயன்பெறும் விதத்தில், கடன் தள்ளுபடி அறிவிப்பை மறு பரிசீலனை செய்து, அரசு அறிவிக்க வேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us