/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலை சீரமைப்பு
/
பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலை சீரமைப்பு
ADDED : ஜூன் 08, 2024 04:55 AM

திண்டிவனம் : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்ற இடத்தில், தற்காலிகமாக சாலை சீரமைக்கும் பணி நடந்தது.
திண்டிவனத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கிய போக்குவரத்து சாலைகளான நேரு வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, ராஜாஜி வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடை பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு, பைப் லைன் புதைப்பது, மேன்ேஹால் அமைப்பது உள்ளிட்ட பணி நடந்தது.
தற்போது இந்த சாலைகள் குண்டும், குழியமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளில் பள்ளி மாணவர்களை ஆட்டோக்களில் செல்லும் போது, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என நேற்று 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து, நேற்று காலை ஈஸ்வரன் கோவில் தெருவில், பாதாள சாக்கடை பணிகளால் குண்டும் குழியுமாக இருந்த சாலைகளில் மண் கொட்டி, பொக் லைன் மூலம் சீரமைக்கப்பட்டது.
இதுபற்றி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பாதாள சாக்கடை பணிகள் முடிந்த நேரு வீதி, ராஜாஜி வீதி ஆகியவை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அதே போல் ஈஸ்வரன் கோவில் தெருவில் பணிகள் முடிவடையாமல் உள்ளதால், நகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை. தற்போது ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள சாலைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ள சாலைகளை அவர்கள்தான் சீரமைக்க வேண்டும்' என்றனர்.