/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மிரட்டல் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
/
தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மிரட்டல் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மிரட்டல் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மிரட்டல் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
ADDED : பிப் 22, 2025 05:04 AM

விழுப்புரம்: அடாவடியில் ஈடுபடும் தனியார் சர்க்கரை ஆலை மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தினர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., அரிதாஸ், வேளாண் இணை இயக்குனர் ஈஸ்வர், துணை இயக்குனர் சீனிவாசன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் அன்பழகன், விற்பனைக்குழு செயலாளர் சந்துரு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பிரேமலதா, ஆர்.டி.ஓ., முருகேசன் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் குறைகள் மற்றும் புகார் தெரிவித்து பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து விபரங்களைப் பெற்று அடையாள எண் உருவாக்கும் பணியை கவனமாக பதிவு செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இணையவழியில் பட்டா மாறுதல் ஆவணங்களைப் பெறும் வகையிலான தமிழ் நிலம் பதிவுக்கு விபரங்களை பெறப்பட்ட போது சர்வே எண் மாற்றிப் பதிவு செய்தல் போன்ற குளறுபடிகள் நிகழ்ந்தன.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் நிலையில், ஸ்மார்ட் மீட்டர் பாக்ஸ் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் மின் கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற அச்சம் நிலவுகிறது.
மாவட்டத்தில், கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்தது. தற்போது ஆழங்கால் வாய்க்கால், கண்டமானடி வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களுக்குத் தண்ணீர் சென்றடையவில்லை.
சாத்தனுார் அணையிலிருந்து தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். 'பெஞ்சல்' புயலால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். படாளத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர், தங்களுக்குத்தான் கரும்பு வழங்க வேண்டுமென, விவசாயிகளை மிரட்டுகின்றனர். இந்த ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
டி.ஆர்.ஓ., அரிதாஸ் மற்றும் அலுவலர்கள் பேசுகையில், 'பெஞ்சல்' புயலால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் அடையாள எண் உருவாக்கும் பணி சரியான முறையில் பதிவு செய்யப்படுகிறது.
சாத்தனுார் அணையிலிருந்து தண்ணீர் பெற திருவண்ணாமலை கலெக்டரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது' என்றனர்.

