/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கார் கண்ணாடி உடைப்பு வழக்கு பா.ம.க., நிர்வாகி ம.பி.,யில் கைது
/
கார் கண்ணாடி உடைப்பு வழக்கு பா.ம.க., நிர்வாகி ம.பி.,யில் கைது
கார் கண்ணாடி உடைப்பு வழக்கு பா.ம.க., நிர்வாகி ம.பி.,யில் கைது
கார் கண்ணாடி உடைப்பு வழக்கு பா.ம.க., நிர்வாகி ம.பி.,யில் கைது
ADDED : ஜூலை 26, 2024 02:06 AM
விக்கிரவாண்டி:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியம், அத்தியூர் திருக்கையில் கடந்த, 1ம் தேதி பா.ம.க., தலைவர் அன்புமணி தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது, கிராமத்தை சேர்ந்த பெண்களை தி.மு.க.,வினர் வெளியே விடாமல் அடைத்து வைத்ததாகக் கூறி, பா.ம.க., மற்றும் பா.ஜ.,வினர் 50க்கும் மேற்பட்டோர், அடைத்து வைத்திருந்த பெண்களை விடுமாறு தி.மு.க.,வினரிடம் தகராறு செய்தனர்.
அப்போது அங்கு வந்த தி.மு.க., கொடி கட்டிய கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். மேலும், தி.மு.க., தேர்தல் பிரசார அலுவலகத்திலிருந்த சேர்களை உடைத்தனர். கஞ்சனுார் போலீசார் வழக்கு பதிந்து, கடந்த 22ம் தேதி அத்தியூர் திருக்கையைச் சேர்ந்த இளங்கோவன், 48, திருநாவுக்கரசு, 36, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கடந்த, 22ம் தேதி மத்தியபிரதேசம், இட்டார்ச்சி ரயில் நிலையத்தில் காணை மேற்கு ஒன்றிய பா.ம.க., துணைச்செயலர் முருகவேல், 47, என்பவரை கைது செய்து விமானத்தில் தமிழகம் அழைத்து வந்தனர். கார் கண்ணாடி உடைப்பு சம்பவத்தில் 28 பேர் மீது வழக்கு பதிந்த நிலையில், இதுவரை மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, தி.மு.க.,வினரின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம் நடத்திய, பா.ம.க.,வினர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிவு செய்ததுடன், கள்ளச்சாராய வணிகர்கள், கஞ்சா வியாபாரிகளை கைது செய்வதற்கு திறனற்ற காவல் துறை, தி.மு.க.,வின் ஏவல் துறையாக மாறி, பா.ம.க., நிர்வாகியை பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தேடிச் சென்று, சர்வதேச பயங்கரவாதியை போல கைது செய்துள்ளதாக, அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.