ADDED : மே 28, 2026 04:30 PM
சில தினங்களாக திருட்டு சம்பவங்கள்... விழுப்புரம் நகர மக்கள் அச்சம்
–நமது நிருபர்–: விழுப்புரம் நகர பகுதியில் பூட்டிய வீடுகளை குறிவைத்து, மர்மநபர்கள் திருட்டில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். விழுப்புரம் நகராட்சியில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. வேலை மற்றும் குழந்தைகளின் படிப்பிற்காக, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாவட்டத்தினரும், விழுப்புரம் நகரில் அதிகளவில் குடியேறி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனிமையான வீடுகள், கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகள், வயதான பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்வோரின் வீடுகளை மர்ம நபர்கள் நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தை அரங்கேற்றுகின்றனர்.
விழுப்புரம் நகரில் மட்டுமின்றி, மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த சில தினங்களாக பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் நடந்துள்ளது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பலர் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர்களில் உள்ள உறவினர்கள் மற்றும் சுற்றுலா செல்கின்றனர். அவர்கள் திரும்பி வரும் போது பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில், அவர்களின் வீடுகளில் நகை, பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வருகிறது. தற்போது திருட்டு சம்வங்கள் அதிகரித்துள்ளதால் நகர மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘யாரும் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபடுகின்றனர். திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து வருகிறோம்.
பொதுமக்கள் வெளியூர்களுக்குச் செல்லும்போது, தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தொடர்ந்து காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அப்படி தகவல் தெரிவிக்கப்படும் வீடுகளில் போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்பட்டு வருகிறது.
இதனால், பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்லும்போது, கட்டாயம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். இதுமட்டுமின்றி போலீசார் இரவு நேரங்களில் தொடர் ரோந்து பணி மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்’ என்றனர்.
மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை, போலீசார் கைது செய்ய வேண்டும். இதேபோன்று, மாவட்டத்தில் பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தங்கள் பகுதி காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்க முன்வர வேண்டும்.
