/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே மேம்பாலத்தில் 'பாஸ்டிங் கர்டர்' பொருத்தும் பணி;; புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கத்தில் விரைவில் பயணிக்கலாம் நெரிசலில் தவிக்கும் கண்டமங்கலத்துக்கு பிறக்குது விடிவு காலம்

ADDED : ஜூலை 28, 2024 06:09 AM

விழுப்புரம்,: கண்டமங்கலம் ரயில்வே மேம்பால கட்டுமான பணியின் ஒரு பகுதியாக, புதுச்சேரி-விழுப்புரம் மார்க்கத்தில் இரும்பு பாலம் நேற்று இணைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதன் மீது சாலை அமைத்து, தற்காலிகமாக வாகனங்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை திட்டத்தில், விழுப்புரம்-புதுச்சேரி இடையிலான சாலைப் பணிகள் முடிந்துள்ளது. கிடப்பில் உள்ள கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த பாலத்துக்காக, ஏற்கனவே இரு மார்க்கத்திலும், மேடான இணைப்பு சாலை போடப்பட்டிருந்தது. பின், ரயில் பாதையை இணைக்க 64 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலத்தில் தனித்தனியாக இரண்டு மிகப்பெரிய இரும்பு மேம்பாலம் (பாஸ்டிங் கர்டர்) கட்டப்பட்டு வந்தது. இதற்காக கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல், கண்டமங்கலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, கட்டுமானப் பணி நடந்தது. இருபுறமும் இரும்பு பாலங்கள் தயார் செய்யப்பட்டு, கடந்த வாரம் தயாரானது.
அதனையடுத்து, 600 டன் எடையுள்ள இரும்பு பாலங்களை நகர்த்தி, கான்கிரீட் பில்லர்கள் மீது வைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கத்தில், ரயில் பாதையின் குறுக்கே ஒரு மார்க்கத்துக்கான இரும்பு பாலத்தை நகர்த்தி வைக்கும் பணி நேற்று நடந்தது.
ரயில்வே அதிகாரிகளின் முன்னிலையில், காலை 10:00 மணிக்கு, 'பாஸ்டிங் கர்டர்' இரும்பு பாலத்தை நகர்த்தும் பணி தொடங்கியது. பாலத்தின் குறுக்கே தற்காலிக டிராக் அமைத்து, அதில், வின்ச் ரோப் மூலம், 'பாஸ்டிங் கர்டர்' இரும்பு பாலத்தை இழுத்து நகர்த்தும் பணி நடந்தது. மெதுவாக நகர்த்தி வெற்றிக்கரமாக பாலத்தின் குறுக்கே வைத்து இணைப்பு பாலத்தை பொறுத்தினர். இந்த பணி மாலை 3:00 மணிக்கு முடிந்தது. இதனால், புதுச்சேரி - விழுப்புரம் மார்க்க ரயில் பாதையில், பகல் 11:00 மணி முதல், 2:00 மணி வரை மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இப்பணி குறித்து, 'நகாய்' அதிகாரிகள் கூறியதாவது:
கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தை இணைக்கும் இரண்டு இரும்பு பாலத்தில், முதல் கட்டமாக, ஒரு பாலம் இன்று நகர்த்தி வைத்து இணைக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த இரும்பு பாலத்தின் மீது சாலை அமைக்கப்படும். அதற்காக ஏற்கனவே கான்கிரீட் கர்டர்கள் தயார் நிலையில் உள்ளது. அவற்றை கொண்டு வந்து அடித்தளமாக பொருத்தும் பணி திங்கள் கிழமை (நாளை) முதல் நடைபெறும். அதன் பிறகு, அதன் மீது தார்ச்சாலை போட்டு சாலை தயாராகும். இதனை தொடர்ந்து, மற்றொரு இரும்பு பாலத்தை நகர்த்தி வைப்பதற்கான பணிகளும் நடக்கும். இதற்கிடையே, மேம்பாலத்தின் இருபுறமும், சிமென்ட் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. ஒருபுறம் அமைக்கப்பட்டுள்ளது; மறுபுறம் சர்வீஸ் சாலை போடும் பணி நடக்கிறது. அதனுடன் இரும்பு பாலத்துடன் சாலையை இணைக்கும் கட்டுமான பணிகளும் நடக்கும்.
விரைவில் ஒரு மார்க்கத்தில் பாலம் தயார்படுத்தப்பட்டு, அதில் தற்காலிகமாக வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து, மறு மார்க்கத்திலும் இரும்பு பாலம் இணைக்கும் பணிகள் முடிந்து, அதனையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.