/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உரிய ஆவணங்களுடன் செல்வோருக்கு உடனே கிடைக்கும்.. அரசு மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது எளிது
/
உரிய ஆவணங்களுடன் செல்வோருக்கு உடனே கிடைக்கும்.. அரசு மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது எளிது
உரிய ஆவணங்களுடன் செல்வோருக்கு உடனே கிடைக்கும்.. அரசு மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது எளிது
உரிய ஆவணங்களுடன் செல்வோருக்கு உடனே கிடைக்கும்.. அரசு மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது எளிது
ADDED : பிப் 27, 2025 09:01 AM

விழுப்புரம்; தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர பொதுமக்கள் முறைப்படி விண்ணப்பித்தால், சிரமமின்றி காப்பீடு அட்டை பெற முடியும். வி.ஏ.ஓ., சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, உடனடியாக காப்பீடு அட்டையை பெறலாம்.
தமிழகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்துடன், 'பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா' என்ற திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்ட பயனாளி குடும்பத்துக்கு ஆண்டுக்கு, ரூ. 5 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது.
இதில், தமிழக அரசின் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிக்கு ஆண்டு வருமானம், ரூ. 1.20 லட்சமாக இருக்க வேண்டும். மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்திற்கு ஆண்டு வருமான வரன்முறை இல்லை. தனியார் மருத்துவமனைகளில், ஏழை மக்கள் எவ்வித கட்டணமும் இன்றி உயர்தர சிகிச்சை பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட இத்திட்டம் காலப்போக்கில், அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் சேர, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையின் நகல், வருமான சான்றிதழ் (ஆண்டுக்கு ரூ.1.20 லட்சத்திற்குள்) ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். பயனாளிகள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உறுப்பினர் சேர்க்கை மையத்தில், விண்ணப்பத்தை சமர்ப்பித்து, காப்பீடு அட்டையை பெறலாம்.
இதேபோல், ஒரு நபர் ரேஷன்கார்டுதாரர் அவசர மருத்துவ சிகிச்சை பெற செல்லும்போது, மருத்துவ காப்பீடு அட்டை அவசியமில்லை. அவர், அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் அட்டை பெற்று வர காலதாமம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், ஒரு நபர் ரேஷன்கார்டுதாரர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை மேற்கொள்வதில், காலதாமதம் செய்யக்கூடாது என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சேர, பொதுமக்கள் தங்கள் பகுதி வி.ஏ.ஓ.,விடம் வருமான சான்று, ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நேரில் வந்து, காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், காப்பீடு திட்டத்திற்காக ஆன்-லைன் மூலம் வருமான சான்று பெற வேண்டிய அவசியமில்லை. வி.ஏ.ஓ., முத்திரை (ரப்பர் ஸ்டாம்ப்) பதிந்து வந்தால் போதுமானது. இவற்றை பொதுமக்கள் கடைபிடித்தால், அரசு மருத்துவ காப்பீடு அட்டையை எளிதில் பெறலாம்.