ADDED : மார் 25, 2024 05:26 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில், குருத்தோலை பவனி வழிபாடு நடந்தது.
கிறிஸ்தவ மக்கள், ஆண்டுதோறும் இயேசுவின் உயிர்த்தெழுதலை தியானிக்கும் வகையில், 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனர். தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
புனித வாரத்தின் தொடக்க நாளில் குருத்தோலை ஞாயிறு திருநாள் நிகழ்ச்சி நடக்கிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில், குருத்தோலை ஞாயிறு திருநாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து, வீதிகளின் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவர்கள் குருத்தோலை திருநாளை கடைபிடித்தனர்.
விழுப்புரம் நகரம் டி.இ.எல்.சி., ஆலயம், கிழக்கு பாண்டிரோடு கிறிஸ்து அரசர் ஆலயம், துாய ஜேம்ஸ் ஆலயத்திலிருந்து, காலை 8:00 மணிக்கு கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்திய படி, கிறிஸ்துவ பாடல்களை பாடியபடி, பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
திண்டிவனம்
சி.எஸ்.ஐ., நல் மேய்ப்பர் ஆலயத்தில் நடந்த குருத்தோலை ஊர்வலம் மேசாக் வர்மன் ஆயர் தலைமையில் நடந்தது. டேவிட் புஷ்பநாதன், மேத்யூபால், திருச்சபை நிர்வாகிகள் உட்பட கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.
இதே போன்று செஞ்சி, கல்பட்டு உள்ளிட்ட தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடந்தது.

