/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கோட்டை வாயிலை மாற்றவேண்டும் என கோரிக்கை: இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்குமா
/
செஞ்சி கோட்டை வாயிலை மாற்றவேண்டும் என கோரிக்கை: இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்குமா
செஞ்சி கோட்டை வாயிலை மாற்றவேண்டும் என கோரிக்கை: இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்குமா
செஞ்சி கோட்டை வாயிலை மாற்றவேண்டும் என கோரிக்கை: இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்குமா
ADDED : செப் 13, 2024 07:23 AM

செஞ்சி: செஞ்சி கோட்டையில் சுற்றுலா பயணிகள் பார்க்க வழியில்லாமல் உள்ள வேலுார் வாயில் பகுதியை பிரதான நுழைவு வாயிலாக மாற்ற வேண்டும் என பொது மக்களும் வரலாற்று ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட செஞ்சி கோட்டை தென் இந்தியாவில் உள்ள கோட்டைகளில் மிக முக்கியமானது. தரைக்கோட்டை, மலைக்கோட்டை என இரண்டும் இணைந்த கோட்டையாகவும், முழு அமைப்புடனும் உள்ள ஒன்றிரண்டு கோட்டைகளில் செஞ்சி கோட்டையும் ஒன்று.
மூன்று மலைகளை இணைத்து கோணார் வம்சத்தினர் கட்டிய கோட்டையை விஜயநகர மன்னர்களும், நாயக்க மன்னர்களும் பலம் பொருந்திய கோட்டையாக மாற்றியதுடன், கலை நயம் மிக்க கட்டடங்களையும், கோவில்களையும் கட்டி உள்ளனர். 12 கி.மீ., சுற்றளவு உள்ள பலம் மிக்க மதில்களை கொண்ட கோட்டையாக இருந்ததால் ஆங்கிலேயர்கள் செஞ்சி கோட்டையை வடக்கின் ட்ராய் என அழைத்தனர்.
உலக அளவில் இந்தியாவுக்கு வரும் வரலாற்று ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் தமிழகத்தில் பார்வையிடும் முக்கிய இடங்களில் 5வது இடத்தில் செஞ்சி கோட்டை உள்ளது. தமிழக மக்களிடமும் தற்போது சுற்றுலா இடங்களை பார்வையிடும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொல்லியல் துறையினர் செஞ்சி கோட்டையில் பல இடங்களில் பூங்கா அமைத்துள்ளனர். அடிப்படை வசதிகளை செய்வதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். மத்திய அரசு இந்திய அரசு மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்த 12 கோட்டைகளை தேர்வு செய்து உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க பரிந்துரை செய்துள்ளது. இதில் 11 கோட்டைகள் மகாராஷ்டிராவிலும், தமிழகத்தில் செஞ்சி கோட்டையும் உள்ளது.
உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிப்பதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்துள்ளது. இவர்கள் இம்மாதம் ௨௭ம் தேதி செஞ்சி கோட்டையில் ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கு அடுத்த சில மாதங்களில் யுனஸ்கோவின் தேர்வு குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
இதற்கு முன்பாக செஞ்சி கோட்டையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப தரம் உயர்த்த இந்திய தொல்லியல் துறையின் கூடுதல் இயக்குநர் ஜான்விச் ஷர்மா வல்லுநர் குழுவுன் கடந்த மாதம் செஞ்சி கோட்டையை ஆய்வு செய்தார். ஆய்வின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு விரிவாக்க பணிகளை தற்போது செய்து வருகின்றனர்.
செஞ்சி கோட்டையில் ராஜகிரி கோட்டையின் நுழைவு பகுதியே தற்போது முக்கிய நுழைவு வாயிலாக உள்ளது.
இந்த இடத்திற்கு பிரதான சாலையில் இருந்து நேரடியாக சென்று விடுகின்றனர். முப்பரிமான வடிவிலான செஞ்சி கோட்டையில் பிரதான வாயில்களாக புதுச்சேரி வாயில், திருச்சிராப்பள்ளி வாயில், வேலுார் வாயில் உள்ளன.
புதுச்சேரி வாயில் சிறைச்சாலையுடன் இருப்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். திருச்சிராப்பள்ளி வாயில் காட்டின் மைய பகுதியில் இருப்பதால் இங்கு யாரும் செல்வதில்லை.
வேலுார் வாயில் செஞ்சி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செல்லியம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ளது.
இந்த வழியை பயன்படுத்தாமல் இந்திய தொல்லியல் துறையினர் மூடி வைத்திருப்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் செல்வதில்லை. இதனால் இந்த பகுதி சமூக விரோதிகளின் புகலிடமாக உள்ளது.
வேலுார் வாயிலின் முன்புள்ள அகலமான, ஆழமான அகழியும், அகழியின் மீதான பாலமும், பாலம் முடியும் இடத்தில் உள்ள காவலர் கூண்டும், உயரமான மதில் சுவரும், எதிரிகள் தாக்க முடியாத வளைவான பாதையும் சுற்றுலா பயணிகளை நிச்சயம் பிரம்மிக்க வைக்கும்.
வேலுார் வாயிலின் முன்பு பல ஏக்கர் காலி இடம் உள்ளது. இங்கு சுற்றுலா வாகனங்களை நிறுத்த முடியும். கூடுதலாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவும் அமைக்க முடியும்.
செஞ்சி கோட்டையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய தொல்லியல் துறையினர் வேலுார் வாயிலை பிரதான வாயிலாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.