/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரவுடி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்; விழுப்புரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
/
ரவுடி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்; விழுப்புரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
ரவுடி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்; விழுப்புரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
ரவுடி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்; விழுப்புரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
ADDED : ஜூலை 31, 2024 03:56 AM

விழுப்புரம் : சாராயம் விற்றதை காட்டிக்கொடுத்த முன் விரோதத்தில், ரவுடியை கழுத்தை அறுத்து கொலை செய்த சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் அடுத்த பிடாகம், நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் மோகன்,35; பிடாகம், மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் முருகதாஸ், 48; ரவுடிகளான இவர்கள் மீது, பல வழக்குகள் உள்ளன. இருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது.
முருகதாஸ் அதே கிராமத்தில் சாராயம் விற்று வந்ததை மோகன் மற்றும் அவரது தம்பி லட்சுமணன் இருவரும் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனால், முருகதாசை போலீசார் கைது செய்ததால், அவர்களுக்கிடையே விரோதம் அதிகரித்தது.
மேலும், மோகன் அடிக்கடி பிடாகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு, அப்பகுதியில் முருகதாஸ் நடத்தி வரும் ஓட்டல் மற்றும் அவரது தம்பி சங்கர் நடத்தி வரும் பிரியாணி கடைக்கு சென்று தகராறு செய்து வந்ததால், அவரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர்.
கடந்த 2015ம் ஆண்டு மே 31ம் தேதி மாலை, பிடாகம் டாஸ்மாக் கடை அருகே உள்ள முருகதாஸ் ஓட்டலின் எதிரே, மோகன் தனது நண்பர்களான சதீஷ், செல்லப்பன் ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு காரில் வந்த முருகதாஸ்,48; அவரது தம்பிகள் சக்திவேல்,38; சங்கர்,39; ரகு,36; உறவினர்கள் ஆறுமுகம்,39; முனுசாமி,45; முருகதாஸ் மனைவி ருக்மணி,38; ஆகிய 7 பேரும் சேர்ந்து, மோகனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
முருகதாஸ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த விழுப்புரம் தாலுகா போலீசார், அவர்கள் மீது விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சுப்புராயலு ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசிம்மவர்மன், குற்றம் சாட்டப்பட்ட முருகதாஸ், அவரது தம்பிகள் சக்திவேல், சங்கர், ரகு, உறவினர் ஆறுமுகம் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். முனுசாமி, ருக்மணி விடுதலை செய்யப்பட்டனர்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகதாஸ் உள்ளிட்ட 5 பேரும் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.