/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய அளவில் தேர்வான மல்லர் கம்பம் வீரர்கள்
/
தேசிய அளவில் தேர்வான மல்லர் கம்பம் வீரர்கள்
ADDED : ஆக 01, 2024 07:14 AM

விழுப்புரம்: தேசிய மல்லர்கம்பம் போட்டியில் பங்கேற்க தேர்வாகியும், மத்திய பிரசேதம் சென்று வர போதிய நிதியுதவி கிடைக்காததால் மல்லர் கம்பம் வீரர், வீராங்கனைகள் சிரமப்படுகின்றனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் வில்சன் மகன் செல்வமொழியன், 27; இவர், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டில் ஒன்றான, மல்லர் கம்பம் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர். மல்லர் கம்பத்தில் தேசிய பயிற்சியாளராகவும், சர்வதேச நடுவராகவும் உள்ளார்.
இவர், கடந்த 7 ஆண்டுகளாக ஹாப்பி மால்கம் குழு பெயரில் மல்லர் கம்பம் பயிற்சியை மாணவ, மாணவிகளுக்கு கற்பித்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று வென்று சாதனை படைத்துள்ளனர்.
இது மட்டுமின்றி, செல்வமொழியன், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சியளித்து வருகிறார். இங்கு பயிற்சி பெற்றவர்களில் தேசிய அளவில் 5 பேர், மாநில அளவில் 50 பேர் பங்கேற்று வென்று சாதித்துள்ளனர்.
செல்வமொழியன், தனது சொந்த பணத்தில் பயிற்சிக்கான அகாடமியை நடத்தி வருகிறார். இவருக்கு, நிதியுதவி செய்ய யாருமில்லாததால், விளையாட்டு உபகரணங்கள் கூட சரிவர இல்லாமல் வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர். சேதமடைந்த உபகரணங்களில் வீரர்கள் மல்லர் கம்பம் பயிற்சி பெற்று வருகின்றனர்.
மத்திய பிரசேதத்தில் பள்ளிகள் அளவில் நடந்த மல்லர் கம்பம் போட்டியில், இந்த அகாடமியை சேர்ந்த 5 பேர் பங்கேற்று வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்கள், மீண்டும் அங்கு சென்று போட்டியில் பங்கேற்க போக்குவரத்து மற்றும் உணவு உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் இன்றி தவித்து வருகின்றனர்.
பிற விளையாட்டுகளில் தேசிய போட்டிக்குச் செல்லும் வீரர்களுக்கு செலவு ஏற்கும் அரசு, மல்லர் கம்பத்தில் மட்டும் தேசிய போட்டிக்கு தகுதியுடைய மாணவர்களுக்கான செலவை ஏற்பதில்லை. இந்த வீரர்களுக்கு, விளையாட்டு துறை அதிகாரிகள் உதவ வேண்டும்.
மேலும், அரசு பள்ளியில், மல்லர் கம்பத்திற்கு என தனி ஆசிரியரை நியமித்து, நேரம் ஒதுக்கி கற்றுத்தரப்பட வேண்டும் என பயிற்சியாளர் செல்வமொழியன், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.