/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை விதிகளை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் அறியாமையும், அலட்சியமும் காரணம் என்கின்றனர் அதிகாரிகள்
/
சாலை விதிகளை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் அறியாமையும், அலட்சியமும் காரணம் என்கின்றனர் அதிகாரிகள்
சாலை விதிகளை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் அறியாமையும், அலட்சியமும் காரணம் என்கின்றனர் அதிகாரிகள்
சாலை விதிகளை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் அறியாமையும், அலட்சியமும் காரணம் என்கின்றனர் அதிகாரிகள்
ADDED : ஏப் 23, 2024 06:34 AM
விழுப்புரம்,: நான்கு வழிச்சாலைகளில், விதிகளை மீறி, அலட்சியமாக வாகனங்கள் இயக்கப்படுவதால், விபத்துகளும், உயரிழப்புகளும் தொடர்கிறது.
தமிழகத்தின் வட, தென் மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதியான விழுப்புரம் மாவட்டத்தில், சென்னை - திருச்சி, சென்னை - கும்பகோணம், திண்டிவனம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலையும், சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை என 5 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் 230 கி.மீ., 15 மாநில நெடுஞ்சாலைகள் 280 கி.மீ., இதர மாவட்ட சாலைகள் என 1,500 கி.மீ., துார சாலைகள் உள்ளன.
15 ஆண்டுகளுக்கு முன், இரு வழிச்சாலையாக இருந்த பிரதான சாலைகள் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டபோதும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த விபத்துகளும், உயிரிழப்புகளும் தற்போதும் தொடர்வது வேதனையக்கிறது.
கடந்த 2021ம் ஆண்டில் 2,220 விபத்துகளும் 514 பேரும் பலியாகினர். 2,633 பேர் காயமடைந்தனர். 2022ம் ஆண்டில் 2,401 விபத்துகளில் 546 பேர் இறந்தனர். 2,861 பேர் காயமடைந்தனர். 2023ம் ஆண்டில் 2,548 விபத்துகளில் 496 பேர் இறந்தனர். 2,542 பேர் காயமடைந்தனர்.
அதிகரிக்கும் விபத்துகளுக்கும், உயிரிழப்புக்கும், வாகன ஓட்டிகளின் அறியாமை, அலட்சியம் தான் காரணம் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்ட பின், விரைவுச்சாலை என்பதால் அதிவேகமாக செல்கின்றனர். வேகத்தின் அளவு 80 கி.மீ., குறிப்பிட்டுள்ள நிலையில், கார், பஸ்கள் 100 முதல் 140 கி.மீ., வேகத்தில் செல்கின்றன. குறிப்பாக கார்களில் செல்லும் பலர், நெடுஞ்சாலையில் ஓட்டுவதற்கான அனுபவமின்றி, சுயமாக ஓட்டிச்செல்வதும், விபத்து பகுதி, பாலம், குறுகிய சாலை, சாலை சந்திப்புகள் என்ற எச்சரிக்கை போர்டுகளை அறியாமல், அலட்சியமாக செல்வதால் பெரிய விபத்துகளில் சிக்குகின்றனர்.
பெரும் கோர விபத்துகளும், அதிக உயிரிழப்புக்கும் காரணம், சாலையின் போக்குவரத்து குறியீடுகளை கவனிக்காமல், அதிவேகமாக இயக்குவதும், சரியான பாதையில் செல்லாமல், இடது, வலது என தாறுமாறாக முந்திச் செல்வதும், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கனரக வாகனங்களில் மோதிவது, கட்டுப்பாட்டை இழுந்து எதிர் திசையில் மோதுவம் நிகழ்கிறது.
அதுமட்டுமின்றி நீண்ட தொலைவுக்கு ஓய்வின்றி வாகனங்களை இயக்கிச் செல்வதால், துாக்க மயக்கத்தில் விபத்து ஏற்படுகிறது. தேர்தல் விடுமுறை முடிந்து நேற்று முன்தினம், தென் மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கு அதிகளவிலான வாகனங்கள் சென்றன. மாலை 4:00 மணிக்குப் பிறகு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் தொடங்கி, விக்கிரவாண்டி, ஓங்கூர் டோல்கேட்டுகள் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விக்கிரவாண்டி டோல்கேட்டில் 4 கி.மீ தொலைவிற்கு வாகனங்கள் அணிவித்து நின்றன. திண்டிவனம், கூட்டேரிப்பட்டு விக்கிரவாண்டி ஆகிய இடங்களில், பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டும் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது.
போக்குவரத்து விதிகளை அறியாமல் கார்களை ஓட்டிச்சென்ற வாகன ஓட்டிகள், இடதுபுறம் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும் வெள்ளை கோட்டுக்கும் கீழ், தார் சாலைக்கும் கீழே தரையில் இறங்கியும் இயக்கிச் சென்றனர்.
பல இடங்களில், நான்கு வழிச்சாலையில் இடதுபுறம் திடீரென கார்களை சாலையிலும், சாலை வளைவுகளிலும் நிறுத்தி வைக்கின்றனர். அப்போது அதிவேகமாக வரும் வாகனங்கள் திடீரென நடுரோட்டில் கார் நிற்பதையறிந்து, மோதும் ஆபத்தான சூழல் ஏற்படுகிறது.
நேற்று முன்தினம், கிளியனுார் பகுதியில் அதிவேகமாக வந்த கார் எதிர் திசையில் வந்த கார் மீது மோதி 3 பேர் பலியாகினர். கூட்டேரிப்பட்டில் கார் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. பல இடங்களில் வாகனங்கள் முட்டிக்கொண்டு, சண்டை போட்டுக்கொண்டனர்.
அவசரம் எனில், தார் சாலைக்கு கீழே தாராளமாக இடமிருக்கும் இடத்தில் நிறுத்த வேண்டும், கனரக வாகனங்கள் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள லாரி லே-பே பகுதியில் நிறுத்த வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையில், விதிகளை நன்கறிந்து அனுபவம் உள்ள டிரைவர்கள் மூலம் வாகனங்களை இயக்க வேண்டும்.
பார்க்கிங் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சாலை குறுக்கிடும் பகுதி, விபத்து பகுதிகளில் கவனமாக இயக்க வேண்டும். மேம்பாலங்களை கடக்கும்போது மெதுவாக இயக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளை பின்பற்றினால் தான், கடும் விபத்துகளையும் உயிரிழப்பையும் தடுக்க முடியும். 6 வழிச்சாலை, 8 வழி சாலை அமைத்தாலும், அலட்சியம் தொடர்ந்தால், விபத்துகளையும், உயிரிழப்புகளை தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

