அரசு மருத்துவமனைகளை தீவிரமாக கண்காணிக்க...உத்தரவு: மழைக்கால நோய் பரவலைத் தடுக்கவும் அறிவுரை
அரசு மருத்துவமனைகளை தீவிரமாக கண்காணிக்க...உத்தரவு: மழைக்கால நோய் பரவலைத் தடுக்கவும் அறிவுரை
UPDATED : ஜூலை 31, 2026 03:59 AM
ADDED : ஜூலை 30, 2026 04:20 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் இருப்பு மற்றும் அடிப்படை வசதிகளை கண்காணிக்கவும், மழைக்கால நோய் பரவலை தடுக்கும் பணிகளை மேற்கொள்ளவும், அலுவலர்களுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், முக்கிய துறை அதிகாரிகள், அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்தில், கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் தலைமை வகித்து, மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் செயல்பாடுகள், மருத்துவ வசதிகளுக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் கட்டடங்களின் தரம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளவாடப்பொருட்கள், நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள், அதன் இருப்புகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்துள்ளனர்.
மேலும், பெண்களுக்கான உடல் நலன் சார்ந்த சுகாதார பணிகள், தொழுநோய் மற்றும் காசநோய் தடுப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய சுகாதார திட்டப் பணிகள், இலக்குகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கமளித்தனர்.
அப்போது, தாய்மை இறப்பு விகிதம், குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு விகிதம், கர்ப்பிணிகள் பதிவு, குறைமாத குழந்தை பிறப்பு எடை, ரத்தச்சோகை திருத்தம், பாலின விகிதம், இள வயது கர்ப்பம் போன்றவற்றின் புள்ளி விவரங்கள், மக்களைத்தேடி மருத்துவம் திட்டம், தேசிய தர உறுதிபாடு தர நிலைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் உள்ளிட்ட சுகாதாரக்குறியீடுகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர்.
இதனையடுத்து, கலெக்டர் பேசுகையில், 'மாவட்டத்தில் பருவமழை காலம் துவங்குவதால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொசுவழி பரவும் நோய்களைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருந்துகள் இருப்பை உறுதி செய்தும், நோயாளிகளுக்கு தேவையான உணவு, குடிநீர், படுக்கை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகளை துாய்மையாக பராமரிக்க வேண்டும்' என்றார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
