/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் கார்களில் போலீஸ் ஸ்டிக்கர்: நடவடிக்கை எடுப்பாரா எஸ்.பி.,
/
தனியார் கார்களில் போலீஸ் ஸ்டிக்கர்: நடவடிக்கை எடுப்பாரா எஸ்.பி.,
தனியார் கார்களில் போலீஸ் ஸ்டிக்கர்: நடவடிக்கை எடுப்பாரா எஸ்.பி.,
தனியார் கார்களில் போலீஸ் ஸ்டிக்கர்: நடவடிக்கை எடுப்பாரா எஸ்.பி.,
ADDED : மார் 25, 2024 05:20 AM
தேர்தல் நேரத்தில் கார்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிச் செல்வதை தடுக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, கடந்த 16ம் தேதி முதல் நன்னடத்தை விதி அமலில் உள்ளது.
பணம், பரிசு பொருள் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போலீசாரும், தேர்தல் பறக்கும் படையினரும் பொது மக்களின் இரு சக்கர வாகனம், கார், வேன், சரக்கு லாரிகள், பஸ் பயணிகள் என சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தினமும் புதுச்சேரி, திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 100க்கும் மேற்பட்ட தனியார் கார்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டி ஒரு சிலர் செல்கின்றனர்.
இதுபோன்ற கார்களில் செல்பவர்களில் பெரும்பாலானோர் போலீஸ் அதிகாரிகளோ, போலீசாரோ இல்லை. போலீசாரின் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் செல்கின்றனர். இந்த வாகனங்களை போலீசாரும், தேர்தல் பறக்கும் படையினரும் எந்த சோதனையும் செய்வதில்லை.
சமூக விரோதிகள், குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு போலீஸ் ஸ்டிக்கரை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி கூடுதல் காவல்துறை இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அருண் அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.
அதில் அங்கீகரிக்கப்படாத தனியார் வாகனங்களில் 'போலீஸ் ஸ்டிக்கர்' பயன்படுத்துவதைக் தடுக்க வேண்டும், போலீசார் தங்களின் சொந்த வாகனங்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்ட கூடாது என அறிவுறுத்தியிருந்தார்.
தேர்தல் நேரத்தில் தனியார் வாகனங்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டி செல்வதற்கு அனுமதித்தால் சட்டவிராதமாக பணம், பரிசு பொருட்கள் கடத்த வழி வகுக்கும். எனவே மாவட்ட எஸ்.பி., இதில் கவனம் செலுத்தி போலீஸ் என்ற ஸ்டிக்கரை தனி நபர்கள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.
-நமது நிருபர்-

