/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கோட்டையில் பேட்டரி கார் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
/
செஞ்சி கோட்டையில் பேட்டரி கார் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
செஞ்சி கோட்டையில் பேட்டரி கார் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
செஞ்சி கோட்டையில் பேட்டரி கார் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஏப் 30, 2024 11:23 PM
செஞ்சி : செஞ்சி கோட்டையைக் காண வரும் வயதானவர்கள் தரை தளப்பகுதியை காண்பதற்கு பேட்டரி கார் வசதியை ஏற்படுத்த இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தரைக்கோட்டை, மலைக்கோட்டை இரண்டும் இணைந்த கோட்டையாக செஞ்சி கோட்டை உள்ளது. இந்தியாவில் முழு அமைப்புடன் உள்ள ஒரு சில கோட்டைகளில் செஞ்சி கோட்டையும் ஒன்று.
தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் செஞ்சி கோட்டைக்கு அதிக அளவில் வருகின்றனர். அகில இந்திய அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் சுற்றுலா இடங்களில் கடந்த ஆண்டு செஞ்சி கோட்டை 5ம் இடத்தைப் பிடித்துள்ளது.
மூன்று மலைகளை இணைத்து கட்டப்பட்டுள்ள செஞ்சி கோட்டையை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் முக்கிய இடங்களான கிருஷ்ணகிரி கோட்டையும், ராஜகிரி கோட்டையும், வெங்கட்ரமணர் கோவிலையும் காண வருகின்றனர்.
இதில் கிருஷ்ணகிரி கோட்டையின் தரைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் காண்பதற்கு ஏதும் இல்லை. ராஜகிரி கோட்டையின் தரைப்பகுதியில் கல்யாண மகால், நெற்களஞ்சியம், தர்பார், காவலர் குடியிருப்பு, வெடிமருந்து கிடங்கு, போர் பயிற்சி கூடம், யானைக்குளம், வேணுகோபாலர் கோவில் என பல இடங்கள் உள்ளன. இவற்றை முழுமையாக சுற்றிப் பார்க்க 2 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டும்.
செஞ்சி கோட்டைக்கு வரும் வயதானர்கள் மலை மீது ஏரி சென்று பார்வையிட முடியாது. ராஜகிரி கோட்டையின் கீழ் உள்ள தரைப்பகுதியை காண்பதற்கும் வயதானர்களால் 2 கி.மீ., துாரம் நடந்து செல்ல முடிவதில்லை. இதனால் உடன் வருபர்கள் கோட்டையை சுற்றி பார்த்து விட்டு வரும் வரை வயதானவர்கள் தாங்கள் வந்த வாகனத்திலோ அல்லது எதாவது ஒரு இடத்திலோ காத்திருக்கின்றனர்.
நீண்ட தொலைவில் இருந்து வந்தாலும் இவர்களால் கோட்டையை சுற்றிப் பார்க்க முடிவதில்லை. செஞ்சி கோட்டையில் பேட்டரி கார் வசதி செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் சுற்றுலா செல்லும் பழக்கம் பொது மக்களிடம் அதிகரித்து வரும் நிலையில், செஞ்சி கோட்டைக்கும் நாள் தோறும் ஏரளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அவ்வாறு வரும் முதியவர்களும் செஞ்சி கோட்டையை சுற்றி பார்க்க வசதியாக பேட்டரி கார் வசதி செய்ய இந்திய தொல்லில் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.