/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் வலதுபுற பணி துவக்கம் வாகன போக்குவரத்துக்கு தடை: ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டம்
/
கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் வலதுபுற பணி துவக்கம் வாகன போக்குவரத்துக்கு தடை: ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டம்
கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் வலதுபுற பணி துவக்கம் வாகன போக்குவரத்துக்கு தடை: ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டம்
கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் வலதுபுற பணி துவக்கம் வாகன போக்குவரத்துக்கு தடை: ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டம்
ADDED : ஏப் 09, 2024 04:44 AM

விழுப்புரம்: கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலத்துக்கான வலதுபுற இரும்பு பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளதால், போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை திட்டத்தில், முதல் கட்டமாக விழுப்புரம் - புதுச்சேரி (எம்.என்.குப்பம்) இடையே சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க 64 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலத்தில் பிரமாண்டமான இரும்பு மேம்பாலம் (பவுஸ்டிங் கர்டர்) கட்டப்படுகிறது.
இதற்காக கடந்தாண்டே இரு மார்க்கங்களிலும் இணைப்பு சாலை போடப்பட்டது. பிறகு தாமதமாக, ரயில் பாதையை இணைக்கும் இரும்பு மேம்பால பணி கடந்த டிசம்பரில் தொடங்கியது. முதல் கட்டமாக இடதுபுறத்தில் (புதுச்சேரி மார்க்க சாலை), இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டு, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனையொட்டி தற்போது, வலதுபுறத்தில் (விழுப்புரம் மார்க்க சாலை) இரும்பு மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது. இதற்காக, கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல், விழுப்புரம் மார்க்க வாகனங்கள் மதகடிப்பட்டு வழியாகவும், புதுச்சேரி மார்க்க வாகனங்கள் அரியூர் வழியாகவும் திருப்பி விடப்பட்டது.
அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கான வாகனங்கள் மட்டுமே சென்று வந்தது. அதனுடன் பொது மக்களும் இரு சக்கர வாகனங்களில் சென்றனர். பிறகு, கார், வேன் ஆகிய இலகு ரக வாகனங்களும் சென்றதால் கட்டுமான பணிகள் பாதித்தது.
அதனால், தற்போது வாகனப் போக்குவரத்துக்கு முழுவதுமாக தடை செய்து, கட்டுமான பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகாய் திட்ட இன்ஜினியர்கள்கூறியதாவது:
கண்டமங்கலம் ரயில்வே பாலம் அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது. இடதுபுறம் இரும்பு பாலம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்து, வலதுபுறத்தில் அமைப்பதற்கு, தற்காலிக பவுண்டேஷன் போட்டு, 18 தற்காலிக பில்லர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இரும்பு தளவாடங்கள் பொருத்தப்பட்டு தயாராக உள்ளது.
இந்த பவுண்டேஷன் பணிகள் முடிக்கப்பட்டு, அதன் மீது 'பவுஸ்டிங் கர்டர்' பாலம் கட்டமைக்கப்படும். இதற்காக போக்குவரத்தை முழுமையாக தடை செய்துள்ளோம். இனி எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது.
தற்போதைய நிலையில் 50 சதவீத பணி முடிந்துள்ளது. ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள் ஒத்துழைத்தால்தான், பணியை துரிதமாக முடிக்க முடியும்.
இப்பணிகள், ரயில்வே துறையில், படிப்படியாக அனுமதி பெற்று நடக்கிறது. தற்போது, பவுண்டேஷன் வேலை நடப்பதால், அந்த பகுதியில் 20 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது. இறுதிகட்ட பணியின்போது, ரயில் மின் பாதையும், ரயில் இயக்கமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பணிகள் நடக்கும்.
இந்த ரயில்வே பாலத்துக்கு, இறுதியாக இருபுறமும் 8 பில்லர்கள் வீதம் 16 கான்கிரீட் பில்லர் அமையும். அதன் மீது, 600 டன் எடையுள்ள, 64 மீட்டர் நீள இரும்பு பாலம் துாக்கி நிறுத்தப்படும். அதன் பிறகு சாலை அமைத்து, போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு இன்ஜினியர்கள் கூறினர்.

