/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவில் திருவிழாவில் ரகளை காவல் நிலையம் முற்றுகை
/
கோவில் திருவிழாவில் ரகளை காவல் நிலையம் முற்றுகை
ADDED : ஜூன் 02, 2024 05:17 AM
வானுார்: வானுார் அருகே கோவில் திருவிழாவில் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி தலைவி தலைமையில் பொது மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
வானுார் அடுத்த எறையூர் கிராமத்தில் நேற்று முன்தினம் கோவில் தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி அன்றிரவு சுவாமி வீதியுலா நடந்தது. அப்போது, அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டனுடன் வந்த வெளியூரைச் சேர்ந்த நபர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நேற்று காலை மணிகண்டனின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த வினித் என்கிற காங்கேயன் மற்றும் அவரது குடும்பத்தினர், எறையூர் ஊராட்சி தலைவி சாவித்திரி மற்றும் ஊர் பொது மக்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இதனால், நேற்று மாலை 5:00 மணிக்கு, ஊராட்சி தலைவி தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வினித் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வானுார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இன்ஸ்பெக்டர் சிவராஜன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவி சாவித்திரி, ஊர் திருவிழாவின் போது ரகளையில் ஈடுபட்ட நபர்களை அழைத்து பேசும் போது, தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்த வினித், அவரது தந்தை குமார், தாய் உமா உட்பட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.