/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போட்டித் தேர்வுகளில் சாதிப்பதற்கு செய்தித்தாள்களை படிக்க வேண்டும்
/
போட்டித் தேர்வுகளில் சாதிப்பதற்கு செய்தித்தாள்களை படிக்க வேண்டும்
போட்டித் தேர்வுகளில் சாதிப்பதற்கு செய்தித்தாள்களை படிக்க வேண்டும்
போட்டித் தேர்வுகளில் சாதிப்பதற்கு செய்தித்தாள்களை படிக்க வேண்டும்
ADDED : செப் 01, 2024 06:48 AM

விழுப்புரம், : 'மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புக்கும், போட்டித் தேர்வுகளில் சாதிக்கவும், செய்தித்தாள்களை படிக்க வேண்டும்' என கூடுதல் எஸ்.பி., திருமால் பேசினார்.
விழுப்புரத்தில் நடந்த 'தினமலர் - பட்டம்' வினாடி வினா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
விழுப்புரம், கடலுார் போன்ற நகர பகுதி மாணவர்கள், சென்னை போன்ற பெருநகர மாணவர்களுக்கு ஈடாக போட்டி போட்டு, தேர்வுகளில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் எழும். ஆனால், போட்டித் தேர்வுகளில் சாதிப்பவர்கள், இது போன்ற சிறு நகரங்களில் உள்ளவர்கள்தான் அதிகம் என்பதை நாம் பார்த்து வருகிறோம்.
பள்ளிக்கூடத்தில் நெம்பர் 1ஆக உள்ள மாணவர்கள் தான் சாதிக்க முடியும் என்ற சந்தேகம் இருக்கலாம். ஆனால், பள்ளியில் சாதாரண நிலையில் படித்த மாணவர்கள் பலர், பிற்காலத்தில் சாதனை படைத்து உயர்ந்துள்ளனர் என்பதும் வரலாறு.
போட்டித் தேர்வுகளில் யார் வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அதற்கு முயற்சி தான் வேண்டும். காலையில் எழுந்ததும் படி, மாலையில் விளையாடு என்று பாரதியார் பாட்டு மூலம் சொல்லியுள்ளார். அது போலவே காலையில் நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும், மாலை நேரங்களில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது விளையாட வேண்டும்.
அப்படி விளையாடிய பிறகு, படிக்கும்போது நல்ல ஞாபக சக்தியும், படிக்கும் பாடமும் புரியும். விளையாட வாய்ப்பில்லாதபோது, அவரவர் வீட்டு வேலைக்கு, பெற்றோருக்கு உதவி செய்யலாம். உடற்பயிற்சிக்கு பிறகு படிக்கும்போதும் நம் மனதில் ஆழமாக பதியும்.
பாட புத்தகங்களுக்கு அப்பால், கூடுதலாக கண்டிப்பாக 'தினமலர்' நாளிதழ் போன்ற தினசரி செய்தித்தாள்களை படித்தாக வேண்டும். குறிப்பாக தாய்மொழி செய்தித்தாளுடன், ஆங்கிலம் செய்தித்தாளும் படித்தால், நல்ல பல தகவல்களை அறிந்து சாதிக்க முடியும்.
நீட், ஜெ.இ.இ., போன்ற போட்டித் தேர்வுகளுக்கும், உயர் படிப்புகளுக்கான தேர்வுகளுக்கும், அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளுக்கு போவதற்கும், தினசரி செய்தித்தாள் வாசிப்பது அவசியம் என்பதை, சாதனை புரிந்த பலர் பேட்டியில் தெரிவிப்பதை பார்த்திருப்பீர்கள்.
நான் தினசரி 'தினமலர்' நாளிதழ் படித்து வருகிறேன். அதில் வரும் செய்தியும், தகவல்களும் தரமாக உள்ளது பெருமை. அதே போல், 'தினமலர்' நாளிதழ் நடத்தும் பட்டம் நாளிதழ் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
பொது அறிவை, பள்ளி காலங்களிலேயே பெற வேண்டியது அவசியம். அதனை இதுபோன்ற நாளிதழ்கள் வழங்குவது சிறப்பாகும். கல்வியோடு, பொது அறிவையும் பெற்று மாணவர்கள் உயர வேண்டும்.
இவ்வாறு ஏ.டி.எஸ்.பி., திருமால் பேசினார்.