ஓட்டு எண்ணும் பணிக்கு மாவட்ட தேர்தல் துறை...தயார்: 3 மையங்களில் பாதுகாப்பிற்கு 1,010 போலீசார்
ஓட்டு எண்ணும் பணிக்கு மாவட்ட தேர்தல் துறை...தயார்: 3 மையங்களில் பாதுகாப்பிற்கு 1,010 போலீசார்
UPDATED : மே 01, 2026 08:28 PM
ADDED : மே 01, 2026 05:00 PM

விழுப்புரம் மாவட்டத்தில், வரும் 4ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணும் பணிக்கு மாவட்ட தேர்தல் மற்றும் காவல் துறையினர் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆகியவை கூட்டணி கட்சிகளுடனும், நா.த.க., - த.வெ.க., தனித்தும் போட்டியிடுவதால், நான்கு முனை போட்டி நிலவியது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திருக்கோவிலுார், வானுார் (தனி) தொகுதிகளில் அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள் நேரடியாகவும், விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி) தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்களை எதிர்த்து தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களும், தி.மு.க., வேட்பாளர்களை எதிர்த்து அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இந்த 7 தொகுதிகளில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணும் மையமாக திண்டிவனம் அரசு பொறியியல் கல்லுாரி ஒதுக்கப்பட்டுள்ளது.
வானுார் (தனி), விழுப்புரம் ஆகிய தொகுதிகளுக்கு விழுப்புரம் அண்ணா கலைக்கல்லுாரியும், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் தொகுதிகளுக்கு விழுப்புரம் காகுப்பம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லுாரியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் ஒரு சுழற்சிக்கு 40 பேர் என மொத்தம் 3 சுழற்சியிலும் நாளொன்றிற்கு 360 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். அதற்காக, ஒரு சட்டசபை தொகுதிக்கு தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை பணியில் ஒரு தொகுதிக்கு 48 பேர் என 7 தொகுதிகளுக்கு 336 ஓட்டு எண்ணும் அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.
இதேபோன்று, ஒரு தொகுதிக்கு 22 நுண்பார்வையாளர்கள் என 7 தொகுதிகளுக்கு 154 பேர் பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓட்டு எண்ணும் பணிக்கு 490 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதேபோன்று, மாவட்ட காவல்துறை சார்பில் ஓட்டு எண்ணும் மையங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க எஸ்.பி., தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1,010 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதில், விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லுாரி மையத்தில் 3 டி.எஸ்.பி.,க்கள் உட்பட 320 பேரும், காகுப்பம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லுாரி மையத்தில் 3 டி.எஸ்.பி.,க்கள் உட்பட 310 பேரும், திண்டிவனம் அண்ணா பொறியியல் கல்லுாரி மையத்தில் 3 டி.எஸ்.பி.,க்கள் உட்பட 380 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், ஓட்டு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு அந்தந்த ஓட்டு எண்ணும் மையங்களில் இருந்து நுாறு மீட்டர் துாரத்தில் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, மொபைல் எடுத்து வருவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. ஏஜன்ட்டுகளுக்கான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இடையில் உள்ளதால், அதற்கான முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட தேர்தல் துறை, காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
-நமது நிருபர்-:
