/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் கருத்து கேட்பு கூட்டம்: சசிகலா, ஓ.பி.எஸ்., குறித்து 'கப்சிப்'

ADDED : ஜூலை 22, 2024 11:58 PM

லோக்சபா தேர்தல் முடிவு குறித்து தொகுதி வாரியாக, சென்னை தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 19ம் தேதி விழுப்புரம் லோக்சபா தொகுதி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொது செயலாளர் பழனிசாமி மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள், விழுப்புரம் லோக்சபா தொகுதி சார்பில், மாவட்ட செயலாளர் சண்முகம், எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், சக்கரபாணி, அ.தி.மு.க., வேட்பாளர் பாக்கியராஜ் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பழனிசாமி, 'வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை மட்டும் கூற வேண்டும். தோல்விக்காண காரணம் குறித்தும், யாரையும் குறை கூறி கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்' என்ற நிபந்தனையுடன் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், லோக்சபா தேர்தலில் நம்மிடம் வலுவான கூட்டணி இல்லாததால்தான் தோல்வி அடைந்தோம். சிறுபான்மை ஓட்டுகள் ஆளுங்கட்சி பக்கம் திரும்பியது.
வரும் தேர்தலில் பா.ம.க., அல்லது வி.சி.,கட்சியுடன் கூட்டணி அமைத்தால் நன்றாக இருக்கும் என யோசனை கூறினர்.
இதற்கு பழனிசாமி, 'லோக்சபா தேர்தலில் தேசிய கட்சியுடன் சிலர் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.
நீங்கள் குறிப்பிட்ட கட்சிகள் (பா.ம.க.,-வி.சி.,) மாநிலம் முழுதும் போட்டியிடவில்லை. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் போட்டியிட்டனர்.
அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் இல்லாமல் ஏற்கனவே ஆட்சியை பிடித்துள்ளது. வரும் 2026 சட்டசபை தேர்தலில் சில கட்சிகள் நம்முடன் கூட்டணிக்கு வரும். அப்போது அ.தி.மு.க., தலைமையில் வலுவான கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும்.
வரும் காலத்தில் ஒன்றிய, மாவட்ட அளவிலும் அடிக்கடி நிர்வாகிகள் கூட்டம் நடத்தி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள்' என அறிவுரை கூறியதாக, கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற ஒரு நிர்வாகி கூட சசிகலா, ஓ.பி.எஸ்., ஆதரவாகவும், அவர்களை கட்சியில் சேர்த்தால் கட்சி பலப்படும் என எந்த கருத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-நமது நிருபர்-