/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேம்பாலம் பணிக்காக சர்வீஸ் சாலை இணைப்பு பணி
/
மேம்பாலம் பணிக்காக சர்வீஸ் சாலை இணைப்பு பணி
ADDED : பிப் 28, 2025 05:27 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வடக்கு பைபாசில் மேம்பாலம் பணி துவங்க சர்வீஸ் சாலை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனையில் விபத்துகளைத் தடுக்க நகாய் மேம்பாலம் அமைக்க முடிவு செய்து கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, தென்பசியார் பகுதிகளில் 6 வழிச் சாலையுடன் மேம்பாலங்கள் கட்ட 60.78 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
சென்னையைச் சேர்ந்த பி.எஸ்.டி., கன்ஸ்டிரக் ஷன் நிறுவனம் இப்பணியை செய்ய ஒப்பந்தம் செய்து முதல் கட்டமாக சர்வீஸ் சாலையை அகலப்படுத்தும் விதமாக இரு புறமும் 7.5 மீட்டர் அகலம் சாலை விரிவாக்கம் பணி நடந்தது. சாலையில் மேற்கு புறத்தில் சர்வீஸ் சாலையை இணைக்க 100 மீட்டர் சாலை அமைக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
வடக்கு பைபாசில் சாலையின் கிழக்கு புறம் சென்னை - திருச்சி சாலையில் உள்ள சர்வீஸ் சாலையை இணைத்து போக்குவரத்தை மாற்றி விட அப்பகுதியிலிருந்த அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகள் அகற்றப்பட்டு சர்வீஸ் சாலை இணைக்கும் பணி நடைபெற்றது.
தற்போது, இறுதிக் கட்டமாக விக்கிரவாண்டி நகருக்குள் வாகனங்கள் நுழையும் பகுதியில் சாலையின் ஒரு புறம் போக்குவரத்தை தடை செய்து சர்வீஸ் சாலை இணைக்கும் பணியும், சர்வீஸ் சாலை அமைக்கும் பகுதியில் உள்ள மின் கம்பங்கள் அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
இன்னும் ஒரு வார காலத்திற்குள் சாலை இணைக்கும் பணி இருபுறமும் முடிந்து, சர்வீஸ் சாலையில் போக்குவரத்தை திருப்பி விட்டு மேம்பாலம் அமைக்கும் பணி துவங்க உள்ளது.
விழுப்புரம் நகாய் திட்ட இயக்குனர் வரதராஜன், பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் பார்வையிட்டு, பணி துரிதமாக நடைபெற ஒப்பந்ததாரருக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.