ADDED : ஜூலை 16, 2026 05:50 PM
நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யும் பணி... வெறி நாய்க்கடி தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் தெரு நாய்களைப் பிடித்து இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக கருத்தடை சிகிச்சையும், தொடர்ந்து வெறி நாய்க்கடி (ரேபிஸ்) தடுப்பூசி செலுத்தவும் நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. விழுப்புரம் நகரில் 42 வார்டுகள் உள்ளன. நகர பகுதிகள் முழுதும் குடியிருப்பு பகுதிகள், பஸ் நிலையம், ரயில் நிலையம் போன்ற முக்கிய சந்திப்பு பகுதிகளிலும், ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சி சார்பில் ஒப்பந்த குழு மூலம் தெருநாய்களை பிடித்து, அதற்கு கருத்தடை செய்து விடுவித்தனர்.
அதன்பிற்கு இந்த நடவடிக்கை கைவிடப்பட்டதால் நகரில் அதிகளவில் தெருநாய்கள் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் சாலையில் திரியும் நாய்கள் பொது மக்கள், சிறார்களைக் கடித்து அச்சுறுத்துவது தொடர்வதால், நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நீதிமன்றமும், நாய்களைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, நகரமன்ற கூட்டங்களில் பேசிய கவுன்சிலர்கள், நாய்களை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
நீண்டகால கோரிக்கையடுத்து, விழுப்புரம் நகராட்சி சார்பில் நாய்கள் பிடிக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. நாய் பிடிக்கும் கூண்டு வாகனத்தில் மூலம் நாய் பிடிக்கும் ஒப்பந்த பணியாளர் குழுக்கள் மூலம் தற்போது நகர பகுதியில் சாலையில் திரியும் நாய்களைப் பிடித்து வருகின்றனர்.
இது குறித்து, நகராட்சி நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
விழுப்புரம் நகராட்சி சார்பில் தெருவில் அதிகளவில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து வந்து, ஏற்கனவே நகராட்சி மையத்தில் வைத்து கருத்தடை செய்து விடுவிக்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த 2 மாதங்களாக நாய்கள் பிடிக்கும் பணி நடக்கிறது. பிடிக்கப்படும் நாய்களுக்கு வி.மருதுார் அரசு கால்நடை மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு, அங்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
ஒரு வார காலத்திற்கு பிறகு, பிடிக்கப்பட்ட நாய்கள் மீண்டும் அந்த பகுதியில் விடுவிக்கப்படுகிறது. கடந்த மாதம் 80 நாய்களும், இந்த மாதம் 70 நாய்களும் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்து விடுவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 42 வார்டு பகுதியிலும் நாய்கள் பிடிக்கும் பணி நடக்கிறது.
குறிப்பிட்ட பகுதியில் அதிகளவில் தெருநாய்கள் திரியும் இடங்கள், பொது மக்களை அச்சுறுத்திய இடங்கள், மக்கள் புகார் அளிக்கப்படும் இடங்களுக்குச் சென்று நாய்களைப் பிடித்து, அறுவை சிகிச்சை செய்து கட்டுப்படுத்தும் பணி நடக்கிறது. பொது மக்கள் அழைத்தால், அந்த இடத்திற்கு சென்று, நாய்கள் பிடிக்கப்படும்.
இதுமட்டுமின்றி, நகராட்சி பகுதியில் நாய்களுக்கு நோய் தடுப்பு தடுப்பூசி போடும் முகாமும் நடத்தப்பட உள்ளது. இதற்காக, 650 வெறிநாயக் கடி (ரேபிஸ்) தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டுள்ளது. விரைவில், அனைத்து வார்டு பகுதிகளிலும் நாய்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு நகர் நல அலுவலர் ஸ்ரீபிரியா தெரிவித்தார்.
