ADDED : ஆக 01, 2026 03:50 PM

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில், ஷண்டிங் ரயில் என்ஜின் முன் சக்கரம் டிராக்கிலிருந்து தரையிறங்கியதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில், காலி ரயில் பெட்டிகளை, ‘யார்டு’க்கு எடுத்து செல்லும் ஷண்டிங் ரயில் என்ஜின், நேற்று முன்தினம் நள்ளிரவு, அருகே உள்ள கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்த காலி பெட்டிகளை கொண்டு வர சென்றது.
அப்போது வழியில் ஷண்டிங் என்ஜின் பழுதானதால், மீண்டும் விழுப்புரம் ரயில்நிலையத்திற்கே கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், நள்ளிரவு 12:00 மணியளவில், விழுப்புரம் ரயில் நிலையம் மேம்பாலம் அருகே வந்தபோது, அந்த ஷண்டிங் என்ஜினின் வலதுபுற முன் சக்கரம் வழுக்கி ரயில் பாதையில் இருந்து தடம் புறண்டு கீழே இறங்கியது. உடனே ரயில் இன்ஜினை நிறுத்திவிட்டு, தொழில்நுட்ப ஊழியர்களை வரவழைத்து, கிரேன் ஜாக்கிகள் மூலம் துாக்கி சீர்படுத்தினர்.
பிறகு ஷண்டிங் என்ஜினை யார்டுக்கு எடுத்து சென்றனர். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால், வழக்கமான ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏதும் இல்லை என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
