/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இலவச வேப்ப மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கல்
/
இலவச வேப்ப மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கல்
ADDED : செப் 08, 2024 06:30 AM

வானுார்: வானுார் தாலுகாவில் உள்ள விவசாயிகளுக்கு இலவச வேப்ப மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நடப்பாண்டில் முதல்வரின் 'மண்ணுயினர் காத்து; மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் இயற்கை சூழலை பாதுகாக்கவும், மண் வளத்தை மேம்படுத்தவும், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை குறைக்கவும் விவசாயிகளுக்கு விலை இல்லா வேப்ப மரக்கன்றுகள் வேளாண் துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி வானுார் தாலுகா விவசாயிகளுக்கு இலவச வேப்ப மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ், விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி, பேசுகையில், 'ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 5 ஏக்கர் பரப்பிற்கு வழங்கப்படும். சாகுபடி செய்யப்படாமல் நீண்ட காலம் தரிசாக உள்ள நிலங்களிலும் நடவு செய்யலாம்.
வேப்ப மரத்தில் இருந்து கிடைக்கும் இலைகளை தழை உரமாக வயலில் பயன்படுத்தலாம். வேப்பங்கொட்டைகளில் இருந்து சாறு பிழிந்து பயிர்களுக்கு தெளிப்பதன் மூலம் பூச்சிகளை விரட்டியடிக்கலாம். வேப்பம் புண்ணாக்கு தயார் செய்து பயிர்களுக்கு உரமாகவும், பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும், வேப்பங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
தேசிய எண்ணெய் வித்து மரப்பயிர்கள் திட்டத்தின் கீழ் அடர் நடவு முறையில் வேப்பங்கன்றுகள் நடவு செய்ய ஏக்கருக்கு 7,000 ரூபாய் பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்காக வானுார் தாலுகாவிற்கு 2.5 ஏக்கர் பரப்பு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது' என்றார்.