/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறப்பட்ட தொழிலாளி உடல் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை
/
விழுப்புரத்தில் போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறப்பட்ட தொழிலாளி உடல் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை
விழுப்புரத்தில் போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறப்பட்ட தொழிலாளி உடல் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை
விழுப்புரத்தில் போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறப்பட்ட தொழிலாளி உடல் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை
ADDED : மே 23, 2024 02:01 AM

விழுப்புரம்:விழுப்புரத்தில் போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறப்படும் தொழிலாளியின் உடல் ஐகோர்ட் உத்தரவின்படி நேற்று மீண்டும் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
விழுப்புரம், பெரிய காலனியை சேர்ந்தவர் ராஜா,43; திருப்பச்சாவடிமேட்டில் உள்ள மதுபான கூட உணவகத்தில் பணிபுரிந்தார்.
அங்கு, அவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்றதாக, விழுப்புரம் தாலுகா போலீசார் கடந்த ஏப். 9ம் அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மறுநாள் ஏப். 10ம் தேதி ராஜாவிற்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.
டாக்டர்கள் குழு
போலீசார் தாக்கியதால் தான் ராஜா இறந்ததாக அவரது மனைவி அஞ்சு,41; அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அஞ்சு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சக்திவேல், ராஜா இறப்பில் உண்மை கண்டறிய, அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழு மூலம் மறு பிரதே பரிசோதனை செய்ய கடந்த 18ம் தேதி உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று காலை 7:00 மணிக்கு, விழுப்புரம் கே.கே.ரோடு அண்ணா நகர் இடுகாட்டில் புதைக்கப்பட்ட ராஜாவின் உடலை கலெக்டர் பழனி, எஸ்.பி., தீபக்சிவாச், மாஜிஸ்திரேட் ராதிகா முன்னிலையில் எடுத்து பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு, பகல் 12:00 மணிக்கு அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர்கள் விழுப்புரம் ரமாதேவி, மதுரை ராமலிங்கம், சென்னை சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ராஜாவின் உடலை ஸ்கேன் செய்து, உடல் உறுப்புகள் நிலை குறித்து ஆய்வு செய்தனர்.
போலீசார் குவிப்பு
தொடர்ந்து பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை மருத்துவக்குழுவினர் ராஜாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது, ராஜாவின் மனைவி அஞ்சு, மகன்கள் குபேந்திரன், சஞ்சய்காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பிரேத பரிசோதனையை தொடர்ந்து ராஜாவின் உடல் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பிரேத கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
மறு பிரேதபரிசோதனையொட்டி, இடுகாடு மற்றும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.

