/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் கலெக்டர் முன்னிலையில் அடக்கம் விழுப்புரத்தில் பரபரப்பு
/
மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் கலெக்டர் முன்னிலையில் அடக்கம் விழுப்புரத்தில் பரபரப்பு
மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் கலெக்டர் முன்னிலையில் அடக்கம் விழுப்புரத்தில் பரபரப்பு
மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் கலெக்டர் முன்னிலையில் அடக்கம் விழுப்புரத்தில் பரபரப்பு
ADDED : மே 30, 2024 09:34 PM

விழுப்புரம்:விழுப்புரத்தில், ஐகோர்ட் உத்தரவுபடி, மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட தொழிலாளி உடல், கலெக்டர் முன்னிலையில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்தவர் ராஜா, 45, திருப்பச்சாவடிமேடு ேஹாட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஏப்., 10ம் தேதி காலை, சட்டவிரோதமாக மது விற்ற புகாரில், விழுப்புரம் தாலுகா போலீசார் ராஜாவை விசாரணைக்கு அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்தனர்.
வீட்டிற்கு வந்த ராஜாவின் உடல்நிலை பாதித்ததால், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
போலீசார் தாக்கியதால்தான் இறந்ததாக, ராஜாவின் மனைவி அஞ்சு, போலீசில் புகார் அளித்தார். நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், போலீஸ் தாக்கியதில் இறந்த தனது கணவரின் உடலை தோண்டி எடுத்து, மறு பரிசோதனை செய்ய வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட், ராஜாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. அதன்படி, விழுப்புரம் கே.கே.ரோடு சுடுகாட்டில் புதைகப்பட்டிருந்த ராஜாவின் உடல், கடந்த 22ம் தேதி, கலெக்டர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. பின், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சென்னை, மதுரை அரசு மருத்துவக்குழு சார்பில், ஸ்கேன் செய்து, மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிந்து ராஜாவின் உடல், ஒப்படைக்கப்படாமல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது. இதனால், உடலை ஒப்படைக்க உத்தரவிட வேண்டுமென, ராஜாவின் மனைவி அஞ்சு, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த ஐகோர்ட், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள ராஜாவின் உடலை, அவரது மனைவி அஞ்சுவிடம் ஒப்படைத்து, அந்த உடலை மீண்டும் அடக்கம் செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று காலை 10:50 மணிக்கு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்த ராஜாவின் உடல், கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், அவரது மனைவி அஞ்சு மற்றும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிறகு, அங்கிருந்து ராஜாவின் உடல், விழுப்புரம் கே.கே. ரோடு சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 11:30 மணிக்கு, கலெக்டர் பழனி, ஆர்.டி.ஓ., காஜாஷாகுல்அமீது, தாசில்தார் வசந்தகிருஷ்ணன், நகராட்சி கமிஷனர் ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.