/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு; கொள்முதல் செய்ய வியாபாரிகள் மறுப்பு சாலையில் கொட்டி விவசாயிகள் எதிர்ப்பு

ADDED : ஆக 11, 2024 06:50 AM

விழுப்புரம் : விழுப்புரம் பகுதியில், வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராததால், விரக்தியடைந்த விவசாயிகள், வெண்டைக்காய்களை சாலையில் கொட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
விழுப்புரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பிடாகம், அத்தியூர் திருவாதி, வேலியம்பாக்கம், குச்சிப்பாளையம், கீரிமேடு, செம்மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் 80 ஏக்கர் பரப்பளவில், வெண்டை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யும் வெண்டைக்காய்களை பிடாகத்தில் உள்ள மொத்த வியாபாரியிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, தமிழகத்தில் இருந்து தினமும் அனுப்பி வைக்கப்பட்ட வெண்டை உள்ளிட்ட காய்கறி சப்ளை தடைபட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையால், வெண்டை விளைச்சல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிடாகத்தில் கொள்முதல் செய்து வரும் பெங்களூருவை சேர்ந்த 'பிக் பாஸ்கெட் - டாடா கம்பெனி' கிலோ 10 ரூபாய் என விலை நிர்ணயித்து தினசரி 10 டன் வரை கொள்முதல் செய்து வந்த நிலையில், தற்போது ஒரு டன் மட்டுமே கொள்முதல் செய்கிறது.
ஒரு விவசாயிடம் சராசரியாக தினமும் 300 கிலோ வரை கொள்முதல் செய்து வந்த நிலையில், தற்போது 50 முதல் 100 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. விழுப்புரம் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றாலும் விலை இல்லை.
இதனால், அறுவடை செய்த வெண்டைக்காய்களை, அத்தியூர் திருவாதி செல்லும் சாலையில் கொட்டி, விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'விளைச்சல் குறைந்தாலும், அதிகரித்தாலும் எங்களுக்கு நஷ்டம்தான், விவசாயம் படிப்படியாக நலிவடைந்து வருகிறது. இப்பிரச்னையை தீர்க்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.