தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ உடைந்து சேதமான மலட்டாறின் கரை பகுதிகள்... சீரமைக்கப்படுமா?:விழுப்புரம் அருகே விவசாயிகள் எதிர்பார்ப்பு

உடைந்து சேதமான மலட்டாறின் கரை பகுதிகள்... சீரமைக்கப்படுமா?:விழுப்புரம் அருகே விவசாயிகள் எதிர்பார்ப்பு

உடைந்து சேதமான மலட்டாறின் கரை பகுதிகள்... சீரமைக்கப்படுமா?:விழுப்புரம் அருகே விவசாயிகள் எதிர்பார்ப்பு


UPDATED : ஜூலை 27, 2026 02:42 AM

ADDED : ஜூலை 26, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2026 02:42 AM ADDED : ஜூலை 26, 2026 03:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: மலட்டாறை துார்வாரி சீர்படுத்தவும், பெஞ்சல் புயல் வெள்ளத்தின போது உடைந்த கரையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றிலிருந்து மலட்டாறு பிரிந்து செல்கிறது. விழுப்புரம் அடுத்த வேளியம்பாக்கம் பகுதியில் பிரிந்து செல்லும் இந்த மலட்டாறு தளவானுார், சித்தாத்துார், காவணிப்பாக்கம், திருப்பாச்சனுார், பில்லுார், சேர்ந்தனுார், அரசமங்கலம், குச்சிப்பாளையம், பஞ்சமாதேவி, சின்னமடம், பூவரசங்குப்பம், மேட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, ரிங்காரெட்டிப்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்கள் வழியாக கடலுார், புதுச்சேரி ஒட்டிய பகுதியில் சென்று, கடலில் கலக்கிறது.

இந்த மலட்டாறில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தின்போது மட்டும் நீரோட்டம் காணப்படும்.

தென்பெண்ணை ஆற்றை விட உயர்வாக உள்ளதால் நீரோட்டம் இன்றி வறண்டுள்ளது. இந்த ஆற்றின் கரை பகுதிகள் நீண்டகால ஆக்கிரமிப்பின் காரணமாக சுருங்கிப்போனது. தென்பெண்ணையாற்றில் மணல் வளம் குன்றியதால் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், மலட்டாற்றில் மணல் கடத்தல் நடந்து ஆற்றின் வளம் குன்றியும், கரை பகுதிகளும் சேதமாகிப்போனது.

விழுப்புரம் தாலுகாவைச் சுற்றி 50 கிராமங்களின் குடிநீர், விவசாயத்திற்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருவதால், இந்த மலட்டாறை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும். உடைந்த கரைகளை சீர்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த பெஞ்சல் புயல் மழையின் போது, தென்பெண்ணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மலட்டாற்றிலும் வெள்ள நீர் வழிந்தோடியது. அப்போது, வளவனுார் அடுத்த பூவரசன்குப்பம் கிராமத்தில் மலட்டாற்றில் 300 மீட்டர் அளவில் வலதுபுற கரை உடைந்து வெள்ளநீர் விவசாய நிலத்தில் புகுந்து, பயிர்களை அடித்துச் சென்று அருகே செல்லும் தெண்பெண்ணை ஆற்றில் மீண்டும் கலந்தது. விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து, மணல் பரவியதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'மலட்டாறு துார்ந்து, பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி விடப்பட்டதால் நீர் வரத்தின்றி வறண்டு கிடக்கிறது. ஆறு மற்றும் கரை பகுதிகளும் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. கடந்த 2024ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பூவரசன்குப்பத்தில் கரை உடைப்பு ஏற்பட்டு பயிர்களை சேதப்படுத்தியது. ஆண்டுதோறும் வெள்ளநீர் பாயும்போது பயிர்கள் வீணாகி வருகிறது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கரையை சீர்படுத்த வேண்டும், மலட்டாற்றின் கரையை முழுவதும் பலப்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை' என்றனர்.

முதல்கட்ட நிதி ஒதுக்கீடு இதுகுறித்து, விழுப்புரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரியிடம் கேட்டபோது, 'தளவானுார் முதல் பூவரசன்குப்பம் வரை, மலட்டாற்றின் கரையை சீர்படுத்தும் வகையில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசிடம் 65 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டிருந்தது. அதில் முதல் கட்டமாக தற்போது 30 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. இதில், தளவானுார் அருகே சிறிய தடுப்பணை கட்டப்பட உள்ளது. மேலும், இந்தாண்டு 30 கோடி ரூபாய் நிதிக்கு ஒப்புதல் கிடைக்கும் என்பதால், மலட்டாற்றின் கரைப்பகுதி சீரமைக்கும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us