/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளி அடித்து கொலை போதை நண்பர்கள் 2 பேர் கைது
/
தொழிலாளி அடித்து கொலை போதை நண்பர்கள் 2 பேர் கைது
ADDED : செப் 14, 2024 05:49 AM

விழுப்புரம்: குடிபோதையில் தொழிலாளியை அடித்து கொலை செய்த நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் திருக்குறிப்பு தொண்டர் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ரஞ்சித்குமார்,45; சலவை தொழிலாளி. அதேபகுதியில் லாண்டரி நடத்தி வந்தார். இவரது மனைவி ஆனந்தி. திருமணமாகி 17 ஆண்டாகும் இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் குடும்ப தகராறில் ஆனந்தி கடந்த 4 ஆண்டாக கணவரை பிரிந்து கடலுாரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
ரஞ்சித்குமார், தனது தாய் செல்வியுடன் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான எதிர்வீட்டை சேர்ந்த முனுசாமி மகன் எலக்ட்ரீசியன் அருண்குமார்,32; அவரது தங்கை கணவர் ரவி மகன் முரளி,27; ஆகிய மூவரும் சித்தேரிக்கரை டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றபோது ரஞ்சித்குமார், அருண்குமார் இடையே தகராறு ஏற்பட்டது. அதனை முரளி தடுக்க முயன்றார். அப்போது, ரஞ்சித்குமார், இருவரையும் ஆபாசமாக திட்டினார்.
அதில், ஆத்திரமடைந்த அருண்குமார், முரளி இருவரும் சேர்ந்து, அருகில் கிடந்த பெரிய கல்லை, ரஞ்சித்குமார் தலையில் போட்டனர். அதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் ரஞ்சித்குமார் உடலை துாக்கிச் சென்று, அருகில் உள்ள புதரில் வீசிவிட்டு வீட்டிற்கு சென்று, உடைகளை மாற்றிக் கொண்டு அருகில் உள்ள பெட்டிக்கடையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், ரஞ்சித்குமார் வெகுநேரமாக வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது தாய் செல்வி, கடையில் நின்ற அருண்குமார், முரளி ஆகியோரிடம் விசாரித்தார். அதற்கு இருவரும், ரஞ்சித்குமார் ஏற்கனவே வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறினர்.
சந்தேகமடைந்த செல்வி, விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார், விரைந்து சென்று அருண்குமார், முரளி ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில் இருவரும் சேர்ந்து, ரஞ்சித்குமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
உடன் போலீசார் விரைந்து சென்று, ரஞ்சித்குமார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து, முரளி, அருண்குமார் ஆகியோரை கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.