/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரோவில்லில் இளைஞர் முகாம் துவக்கம்
/
ஆரோவில்லில் இளைஞர் முகாம் துவக்கம்
ADDED : செப் 03, 2024 11:54 PM

வானுார் : ஆரோவில்லில் 5 நாள் நடைபெறும் இளைஞர் முகாம் துவங்கியது.
மத்திய கலாசார அமைச்சகமும், மத்திய கல்வி அமைச்சகமும் இணைந்து, யோகி ஸ்ரீ அரவிந்தரின் கற்பனையின்படி, 'வசுதேவ குடும்பகம்' என்ற கருத்தை ஊக்குவிக்கும் வகையில் 5 நாட்களுக்கான இளைஞர் முகாம் சர்வதேச நகரமான ஆரோவிலில் நேற்று துவங்கியது.
முகாமில் பங்கேற்க 530க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. அதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
முகாமை ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, குஜராத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
ஆரோவில் அறக்கட்டளை இயக்குனர் சொர்ணாம்பிகா, சிறப்பு அதிகாரி வஞ்சுனவள்ளி சிறப்புரையாற்றினர்.
முகாமில் புகழ்பெற்ற நிபுணர்களின் நுண்ணறிவு விரிவுரைகள், கலாசார நடவடிக்கைகள், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் குறித்து இடம் பெறுகிறது.
இதுகுறித்து ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், 'இந்த முகாமில் அரவிந்தர் ஆசிரமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் சொற்பொழிவுகள், இந்திய அறிவு அமைப்பு, மனித உறவுகள், நடைமுறை ஆன்மிகம், செயல்பாட்டு தர்மம் விளக்கப்படும். ஆரோவில் உள்ள சூழல் விளக்கப்படும்.
இங்குள்ள பண்ணைகளில் பணி செய்தல், இசை சிகிச்சை அமர்வுகளில் பங்கேற்பது, ஆரோவில் வாசிகளுடன் பழகுதல். விளையாடுதல், ஆரோவில்லில் சைக்கிள் ஓட்டுதல், யோகா பயிற்சி, உடல் தகுதி நடவடிக்கைகள், மாத்திர் மந்திரை பார்வையிடுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் அடங்கும்' என்றனர்.