/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒரே தொகுதிக்கு குறி வைக்கும் 2 கட்சிகள்
/
ஒரே தொகுதிக்கு குறி வைக்கும் 2 கட்சிகள்
ADDED : பிப் 19, 2024 11:24 PM
விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கு கூட்டணியில் உள்ள 2 கட்சிகள் சீட்டிற்கு மோதுவதால் குழப்பம் நீடிக்கிறது.
தமிழகத்தில் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் தேதி விரைவில் தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, அ.தி.மு.க., - தி.மு.க., போன்ற கட்சிகள் தங்களின் கூட்டணி நிர்வாகிகளை சந்தித்து கூட்டணியை பலப்படுத்துவதற்கான செயல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, தொகுதி பங்கீடு கூட்டணி கட்சித் தலைவர்கள் மத்தியில் நடைபெற உள்ளது. இந்த சூழலில், விழுப்புரம் லோக்சபா தொகுதியில் கடந்த தேர்தலில் வி.சி., சார்பில் ரவிக்குமார் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.
தற்போது அவரின் பதவி காலம் முடிவடையும் நிலையில், வி.சி., கட்சியினர் மீண்டும் விழுப்புரம் லோக்சபா தொகுதியை தி.மு.க., கூட்டணியில் கேட்பதோடு, உதயசூரியன் சின்னமின்றி தனி சின்னத்தில் நிற்பதாகவும் தங்களின் முடிவை கட்சியின் தலைமைக்கு தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், விழுப்புரம் லோக்சபா தொகுதியை தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., கட்சியும் கேட்கின்றது. ஒரே தொகுதிக்கு கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் போட்டி போடுவதால் யாருக்கு சீட் ஒதுக்குவதென புரியாமல் தி.மு.க., தலைமை திண்டாடி வருகிறது. தொகுதி ஒதுக்கும் போது இது பற்றி பேசி முடிவு செய்யலாம் என தி.மு.க., தலைமை கூறியதை கேட்டு, அந்த இரு கட்சிகளும் தற்போது சீட்டை எதிர்பார்த்து அமைதி காத்து வருகின்றனர்.

