ADDED : அக் 02, 2025 02:16 AM

விழுப்புரம்: சென்னையில், பீகாரை சேர்ந்தவரை கொலை செய்துவிட்டு தப்பி சென்ற 3 பேரை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர்.
பீகாரை சேர்ந்தவர் நிர்லாகுமார். சென்னை, மாதவரம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவரும் அங்கு பணிபுரிந்த ஒடிசா மாநிலம், பத்ரக் மாவட்டம், பிராஸ் பகுதியை சேர்ந்த சங்கரம், 23; பபித்ரா, 22; தீனோத், 22; ஆகியோரும் நேற்று முன்தினம் ஆயுத பூஜைக்கு படைத்துள்ளனர்.
அப்போது, காலணி அணிந்து வந்ததால் இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சங்கரம் உள்ளிட்ட மூன்று பேர், நிர்லாகுமாரை கொலை செய்துவிட்டு தப்பித்து சென்றனர். இது குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிந்து சங்கரம் உள்ளிட்டோரை தேடிவந்தனர்.
இதில் சங்கரம் உள்ளிட்ட மூன்று பேரும் பஸ் மூலம் விழுப்புரம் வழியாக தப்பித்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, மாதவரம் போலீசார் தகவல் தெரி வித்தனர். இதையடுத்து, விழுப்புரம் மேற்கு போலீசார், புதிய பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நாமக்கல் பஸ்சில் ஈரோட்டிற்கு தப்பிச்செல்ல முயன்ற சங்கரம் உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து மாதவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாதவரம் போலீசார் விழுப்புரத்திற்கு விரைந்து வந்து சங்கரம் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்றனர்.