/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகை வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 4 கிலோ தங்க நகைகள் கொள்ளை விழுப்புரத்தில் பட்டப்பகலில் 4 பேர் கைவரிசை
/
நகை வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 4 கிலோ தங்க நகைகள் கொள்ளை விழுப்புரத்தில் பட்டப்பகலில் 4 பேர் கைவரிசை
நகை வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 4 கிலோ தங்க நகைகள் கொள்ளை விழுப்புரத்தில் பட்டப்பகலில் 4 பேர் கைவரிசை
நகை வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 4 கிலோ தங்க நகைகள் கொள்ளை விழுப்புரத்தில் பட்டப்பகலில் 4 பேர் கைவரிசை
ADDED : மார் 04, 2026 05:15 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டப்பகலில் கத்தி முனையில் நகை வியாபாரியிடம் 4 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம், விராட்டிகுப்பம், பாதை ஜனகராஜ் கார்டனைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 43; வீட்டில் கடை வைத்து தங்க நகைகள் செய்யும் தொழில் செய்து வருகிறார். மோதிரம், ஜிமிக்கி உள்ளிட்ட நகைகள் செய்து ரயில் மூலம் சென்று சென்னையில் உள்ள நகைக் கடை வியாபாரிகளிடம் கொடுத்து வருகிறார்.
இவர், நேற்று வீட்டிலிருந்து 4 கிலோ எடையுள்ள நகைகளை லேப் டாப் பேக்கில் எடுத்துக்கொண்டு, கடையில் பணிபுரியும் முருகையன் லே அவுட்டைச் சேர்ந்த முரளி, 26; என்பவருடன் மொபட்டில் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு சென்றார். மொபட்டை ராஜமாணிக்கம் ஓட்டிச்சென்றார்.
விழுப்புரம் பெருமாள் கோவில் தெரு, கோட்டை விநாயகர் கோவில் எதிரே காலை 11:20 மணியளவில் சென்றபோது, பின்னால் ஒரு பைக் மற்றும் ஒரு மொபட்டில் முகத்தில் கர்ச்சிப் கட்டிக்கொண்டு வந்த 4 பேர் ராஜமாணிக்கம் மொபட்டை மோதுவதுபோல் வந்து நிறுத்தினர்.
பின், ராஜமாணிக்கத்திடம் அந்த நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த நகை பேக்கை பறித்துக்கொண்டு கத்தியை கீழே போட்டு விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த எஸ்.பி., சாய் பிரனீத், ஏ.எஸ்.பி., ரவீந்திரநாத் குப்தா, டவுன் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு கிடந்த கத்தியை கைப்பற்றினர்.
பின், ராஜமாணிக்கம் மற்றும் முரளியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, 3 இன்ஸ்பெக்டர்கள், 5 சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பின் தொடர்ந்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ராஜமாணிக்கம் வீட்டில் இருந்து கிளம்பியபோது, 2 வாகனங்களில் மர்ம நபர்கள் இடைவெளி விட்டு பின்தொடர்ந்து வந்துள்ளனர். கோட்டை விநாயகர் கோவில் அருகே வந்தபோது, 2 வாகனங்களில் வந்தவர்களும் ஒன்று சேர்ந்து ராஜமாணிக்கத்தை மிரட்டி கொள்ளையடித்து சென்றது பதிவாகியுள்ளது.
மேலும், முதல் கேமரா பதிவில் முகத்தை மூடாமல் இருந்த மர்ம நபர்கள், கொள்ளையடிக்கும் இடத்தில் உள்ள கேமரா பதிவில் முகத்தை மூடியுள்ளது தெரியவந்துள்ளது.
கொள்ளை நடந்த நேரத்தில், அப்பகுதியில் எந்தெந்த மொபைல் எண்கள் பயன்பாட்டில் இருந்தது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் டவர் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.
பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை குறித்து விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

